தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: 2024-ம் ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருதுப் பெற்ற ஆசிரியர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நன்னாளில் தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு “தேசிய ஆசிரியர் விருது” ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. 2024-ஆம் ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருதிற்கு 38 மாவட்டங்களைச் சார்ந்த 102 ஆசிரியர்கள் இணைய வழியில் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் பொம்மைகளை பயன்படுத்தி கற்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வேலூர் மாவட்டம், ராஜகுப்பம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் இரா. கோபிநாத் மற்றும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குதல் மற்றும் தொழிற்கல்வி கற்பித்தலில் கணினி தொழில்நுட்பம் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்காக மதுரை, லட்சுமிபுரம், டி.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியின் (அடிப்படை தானியங்கி ஊர்திப் பொறியியல் – Basic Auto Mobile Engineering) மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 இரா.சே. முரளிதரன் ஆகிய இரண்டு ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் கடந்த செப்டம்பர் 5-ம் நாளன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “தேசிய நல்லாசிரியர் விருது” வழங்கப்பட்டது.

“தேசிய நல்லாசிரியர் விருது” பெற்ற ஆசிரியர்கள் இரா. கோபிநாத் மற்றும் இரா. சே. முரளிதரன் ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் எஸ். மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: