ஜன் சுராஜ் என்ற பெயரில் பிரசாந்த் கிஷோர் கட்சி தொடங்கினார்: ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து என வாக்குறுதி

பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்று முறைப்படி புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது அந்த மாநில அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரையாக பயணம் செய்தார். 2 ஆண்டுகள் அந்த பயணம் மேற்கொண்ட அவர் தற்போது புதிய அரசியல் கட்சியை, காந்தி பிறந்தநாளான நேற்று முறைப்படி தொடங்கினார். அந்த கட்சிக்கு ஜன் சுராஜ் என்று பெயரிட்டுள்ளார்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவ், பிரபல அரசியல் தலைவர் பவன் வர்மா, முன்னாள் எம்பி மோனாசிர் ஹாசன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பிரமுகர்கள் முன்னிலையில் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் புதிய கட்சி பெயரை பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இதை தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி மனோஜ் பார்தியை கட்சியின் செயல் தலைவராக நியமித்தார். புதிய கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் நடைபெறும் வரை, அதாவது மார்ச் மாதம் வரை மனோஜ் பார்தி அந்த பதவியில் இருப்பார் என்று கூறினார். இந்த விழாவில் பிரசாந்த் கிஷோர் கூறுகையில்,’ ஜன் சுராஜ் ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யப்படும். ஆனால் மக்கள் டெபாசிட் செய்யும் சேமிப்பின் விகிதம் பீகாருக்கு கிடைக்கும்படி வங்கிகளை நிர்பந்திப்போம் ’ என்றார்.

* நாட்டின் செல்வத்தை மோடி குஜராத்திற்கு திருப்பிவிட்டார்
பிரசாந்த் கிஷோர் கூறுகையில்,’ என்னையும், உங்களையும் போன்றவர்களும் குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில் அவரது பேச்சைக் கேட்டு 2014ல் அவருக்கு வாக்களித்தோம். உண்மையாகவே குஜராத் முன்னேறி வருகிறது. ஒட்டுமொத்த நாட்டின் செல்வமும் திசை திருப்பப்பட்டதாகத் தெரிகிறது. குஜராத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. பீகாரில் இருந்து மக்கள் வேலை தேடி அந்த மாநிலத்திற்கு படையெடுக்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக வாக்களித்த பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்?’ என்றார்.

The post ஜன் சுராஜ் என்ற பெயரில் பிரசாந்த் கிஷோர் கட்சி தொடங்கினார்: ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து என வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: