செங்கல்பட்டு – உளுந்தூர்பேட்டை வரை 8 வழித்தடமாக தரம் உயர்த்த வேண்டும்: டெல்லி ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளில் உள்ள இடர்பாடுகளைக் களைந்து, பணிகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒன்றிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: கிளாம்பாக்கம் முதல் செட்டிப்புண்ணியம் வரையிலான 8 வழிச்சாலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன போக்குவரத்து உள்ளது. சென்னை நகரின் புறநகர்ப் பகுதியில் இந்த வழித்தடம் இருப்பதால் விழாக்காலம், விடுமுறைகள், வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே, ஒன்றிய அமைச்சர் முன்னுரிமை அடிப்படையில், உயர்மட்ட 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மேலும், செங்கல்பட்டு முதல் உளுந்தூர்பேட்டை வரை உள்ள 4 வழித்தடமானது, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடைபெறுகின்றன. எனவே, முன்னுரிமை அடிப்படையில் 6 வழிச்சாலையாக மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். 31 கி.மீ. நீளமுடைய சாலைப் பணிகள் வனத்துறையின் அனுமதி எதிர்நோக்கி நிலுவையில் உள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக நிலம் மதிப்பு நிர்ணயம் செய்து உயர் அழுத்த மின் கோபுரங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் எடுப்பு அலுவலர்களை நியமனம் செய்வதில் காலதாமதத்தை தவிர்த்தால்தான், சாலைகளை குறித்த காலக்கெடுவிற்குள் அமைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பாக, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post செங்கல்பட்டு – உளுந்தூர்பேட்டை வரை 8 வழித்தடமாக தரம் உயர்த்த வேண்டும்: டெல்லி ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: