மாதம் ரூ.2.50 லட்சம் வாடகையில் வீடு, 5 கார், 15 வேலையாள் சீமானுக்கு எதிராக நாதக நிர்வாகிகள் கொந்தளிப்பு: செல்வந்தர்களாக இருந்த நாங்கள் தினக்கூலிகளாகி விட்டோம் என குமுறல்


கிருஷ்ணகிரி: சீமானுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கொந்தளித்து பேட்டியளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில், ஊத்தங்கரை தொகுதி செயலாளர் ஈழமுரசு, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ஐயப்பன், கிருஷ்ணகிரி தொகுதி தலைவர் திருமூர்த்தி, பர்கூர் தொகுதி செயலாளர் அப்துல் ரகுமான், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் காசிலிங்கம், ஒன்றிய செயலாளர் செல்வா உள்பட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சி செயல்பாடுகளிலிருந்து விலகி, சீமானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நேற்று கிருஷ்ணகிரியில் மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன் நா.த.க.வில் நான் சேர்ந்தேன். தற்போது சீமானின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டது. அவரை தற்போது நெருங்கவே முடியவில்லை. 15 வருடமாக எனது குடும்பத்தை மறந்து, எனது மனைவியின் தாலியை விற்று, சொத்துகளை விற்று இந்த கட்சிக்காக உழைத்தேன். திட்டமிட்டு எங்களை ஒதுக்குகிறார்கள். நாங்கள் சொல்லும் வேட்பாளர் யாரையும் அறிவிக்கவில்லை. மாற்று கட்சிக்காரர் வீட்டிற்கு செல்கிறீர்கள்.

பணக்காரர் வீட்டிற்கு செல்கிறீர்கள். ஒரு தொண்டன் வீட்டிற்காவது நீங்கள் சென்றுள்ளீர்களா?. இவர் அனைத்து கட்சியினருடன் பேசுகிறார். திருமணத்திற்கு செல்கிறார். அதே நாங்கள் சொந்த ஊரில் வேறு கட்சியை சேர்ந்த சொந்தக்காரர் வீட்டு திருமணத்திற்கு சென்றால் கூட கேட்கிறார். அடிமைத்தனமாக இருக்கிறோம். ராஜராஜ சோழன் சிலை வைக்க ரூ.50 லட்சம் மதிப்பிலான இடத்தை எனது பெயரில் (சீமான் பெயரில்) எழுதிக்கொள் என்கிறார்.

நான் அதற்கு மறுப்பு தெரிவித்து, கட்சி பெயரில்தான் பதிவு செய்வோம் என கூறினேன். பிச்சை எடுத்து கட்சிக்கு செலவு செய்கிறோம். ஆனால் நாங்கள் கொடுத்த இடத்தை பாக்கியராஜ் என்பவர் பெயரில் பதிவு செய்துள்ளீர்கள். அப்ப யாருக்கான கட்சி இது. தமிழ்நாட்டை மண்ணின் மைந்தர்கள் தான் ஆள வேண்டும் என சொல்கிறீர்கள். நீங்கள் தேர்தலில் மண்ணின் மைந்தர்களுக்கா சீட்டு கொடுக்கிறீர்கள். கார்ப்பரேட் கம்பெனி போல் கட்சியை நடத்துகிறீர்கள்.

நான் ஒரு மண்டல செயலாளராக இருக்கிறேன். என் மனைவி 100 நாள் வேலைக்கு செல்கிறார். ஆனால் உங்கள் வீட்டில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். எனக்காவது 5 ஏக்கர் நிலம் இருந்தது. உங்களுக்கு என்ன இருந்தது. 3 பேர் இருக்கும் உங்கள் வீட்டில் 5 கார், 15 பேர் வேலை செய்கிறார்கள். மாதம் 2.50 லட்சம் ரூபாய் வாடகை கொடுக்கிறீர்கள். எந்த ஜன்மத்தில் செய்த பாவமோ, உங்களிடம் வந்து மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்.

இளைஞர்கள் ஏராளமானோர் இக்கட்சியில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள், யாரும் இவரை நம்பி உங்கள் இளமையை அழித்துக் கொள்ளாதீர்கள். நாங்கள் கட்சியில் சேரும்போது செல்வந்தர்களாக இருந்தோம். கட்சி, பொதுக்கூட்டம், நிர்வாக செலவுகளுக்காக அவற்றை இழந்து இன்று தினக்கூலிகளாகி உள்ளோம்.

கட்சி செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என நடத்தி அவரே பேசி, அவரே முடிவெடுத்துக் கொள்கிறார். கட்சியிலிருந்து விலகிச் சென்ற மாநில நிர்வாகிகளை ஒன்றிணைத்து, சீமான் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்று சேர்க்கவேண்டும். இல்லை எனில் நாங்கள் தமிழ் தேசிய வளர்ச்சிக்காக போராடும் கட்சிகளுடனோ, அல்லது புதிய அமைப்பையோ உருவாக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* இளைஞர்கள் ஏராளமானோர் இக்கட்சியில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள், யாரும் இவரை நம்பி உங்கள் இளமையை அழித்துக் கொள்ளாதீர்கள்.

The post மாதம் ரூ.2.50 லட்சம் வாடகையில் வீடு, 5 கார், 15 வேலையாள் சீமானுக்கு எதிராக நாதக நிர்வாகிகள் கொந்தளிப்பு: செல்வந்தர்களாக இருந்த நாங்கள் தினக்கூலிகளாகி விட்டோம் என குமுறல் appeared first on Dinakaran.

Related Stories: