கையெழுத்திட மறுக்கும் துணை தலைவரால் நெரும்பூர் ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் பாதிப்பு: புதிய நபரை நியமிக்க கலெக்டரிடம் பரிந்துரை

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நெரும்பூர் ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த, ஊராட்சியில் தலைவராக லட்சுமி குபேந்திரன் என்பவரும், 8வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட லோகநாதன் என்பவர் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள், பதவியேற்ற ஆரம்ப காலம் முதல் ஊராட்சியின் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள், நிர்வாக செலவினங்கள் மற்றும் பணியாளர்கள் சம்பளம் ஆகியவைகளுக்கு துணை தலைவர் லோகநாதன் கையெழுத்திடாமல் முரண்டு பிடிப்பதால் திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதுடன், தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் முடங்கிப்போய் தொய்வு நிலை ஏற்படுகிறது.

மேலும், திட்டப்பணிகள் மற்றும் சம்பளம் உள்ளிட்டவைகளுக்காக இணை கையெழுத்திட லோகநாதனுக்கு பதில் வேறொருவரை தேர்ந்தெடுக்க ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சியில் அடங்கிய 8 வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து கடந்த மாதம் 26ம்தேதி மன்ற கூட்டம் நடத்தி, ஊராட்சியில் உள்ள 9வது வார்டு உறுப்பினரான மல்லிகா என்பவரை இணை கையெழுத்திட தேர்வு செய்து, தீர்மானம் நிறைவேற்றி திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கருக்கு பரிந்துரை கடிதமாக அளித்தனர். அதனைத்தொடர்ந்து, 9வது வார்டு உறுப்பினர் மல்லிகாவை இணை கையெழுத்திட நியமனம் செய்ய உத்தரவிட வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆகியோருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

* ஊராட்சி துணை தலைவர் மீது வழக்கு
நெரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமியின் கணவர் குபேந்திரனிடம் வாக்குவாதம் செய்து, அவரை தாக்கி காயப்படுத்திய துணை தலைவர் லோகநாதன் மீது திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து, போலீசார் லோகநாதன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கையெழுத்திட மறுக்கும் துணை தலைவரால் நெரும்பூர் ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் பாதிப்பு: புதிய நபரை நியமிக்க கலெக்டரிடம் பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: