காஞ்சிபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு பள்ளிக்கல்வித்துறைக்கு சிஎஸ்ஆர் மூலம் ரூ.400 கோடி நிதி: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளிக்கல்வித் துறைக்கு சிஎஸ்ஆர் திட்டத்தின் மூலம் நிதி ரூ.400 கோடியை தாண்டியுள்ளது என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு அரசு பள்ளிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், பள்ளியில் இடைநின்ற மாணவ – மாணவிகள் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டறிந்து, பள்ளிக்கு வராமல் நின்றுபோன மாணவியின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அவர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: “வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மழைநீரால் பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் அலுவலகத்தை தரைத்தளத்தில் இருந்து முதல்தளத்திற்கு மாற்றியமைக்க கோரி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், பள்ளிக்கல்வித்துறைக்கு சிஎஸ்ஆர் திட்டத்தின் மூலம் நிதி ரூ.400 கோடியை தாண்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1964 புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி வாயிலாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். பேட்டியின்போது, காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி, மாநகராட்சி கவுன்சிலர் மல்லிகா, ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.எம்.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு பள்ளிக்கல்வித்துறைக்கு சிஎஸ்ஆர் மூலம் ரூ.400 கோடி நிதி: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: