காலாங்கரையில் ரூ.1.25 கோடியில் கால்வாய் நிரந்தர சீரமைப்பு பணி

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி அடுத்த காலாங்கரை பகுதியில் வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட கால்வாய் பகுதியில் ரூ.1.25 கோடியில் நிரந்தர சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழை காரணமாக, கோரம்பள்ளம் குளத்தின் கரையிலும், உப்பாற்று ஓடை மற்றும் பாசன வாய்க்கால் கரைகளிலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் ஏராளமான சாலைகள் அரிக்கப்பட்டு, பல ஊர்கள் துண்டிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து மணலை போட்டு கரை உடைப்புகள் அடைக்கப்பட்டு, சாலைகளும் சரி செய்யப்பட்டன. அப்போது கரை அடைப்புக்காக தற்காலிகமாக போடப்பட்ட மணல் வழியாக குளம் மற்றும் வாய்க்காலில் உள்ள தண்ணீர் கசிந்து விவசாய நிலங்களுக்குள் பெருகி, பயிர்கள் பாதிக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில், வெள்ளத்தால் அரித்து, துண்டிக்கப்பட்ட கோரம்பள்ளம் காலாங்கரை சாலை பகுதிகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு எதிர்புறம் உள்ள தோட்டத்திற்குள் பெருகி வந்தது. இதனால் அப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் வேதனை அடைந்தனர். எனவே, விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் கசிவதை உடனடியாக தடுத்து நிறுத்தி பயிர்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். கரை மற்றும் சாலையில் அரிக்கப்பட்ட இடத்திலேயே தடுப்பு சுவர் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறையின் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக காலாங்கரை கிராமத்தில் கோரம்பள்ளம் கண்மாயில் நிரந்தர சீரமைப்பு பணிகள் ரூ.1.25 கோடியில் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post காலாங்கரையில் ரூ.1.25 கோடியில் கால்வாய் நிரந்தர சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Related Stories: