ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் காயம்: தொற்றுநோய் பரவும் அபாயம், நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், அதனை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லாத்தூர் கிராமம். இங்கு, சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் காலனி பகுதியும் உள்ளது. இந்த காலனியில் அம்பேத்கர் தெரு மற்றும் ராஜீவ் காந்தி தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது. இந்த பகுதியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தெருக்களிலே தேங்கி நிற்பதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குழந்தைகள் ஆபத்தை உணராமல் கழிவுநீர் கால்வாய் அருகே விளையாடுவதால் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்நிலையில், அப்பகுதி சேர்ந்த 2 குழந்தைகள் நேற்று கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்ததால் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள், வங்கனூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்திருந்தனர். எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இனியாவது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வெளியேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் காயம்: தொற்றுநோய் பரவும் அபாயம், நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: