அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில் சென்னையை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீட்டு மனைப்பிரிவு உள்ளது. இந்த வளாகத்தில் 40 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, 20 ஏக்கர் நிலத்தை மீட்டனர். அதில் உணவுப்பொருள் பாதுகாப்பு கிடங்கு, இருளர் குடியிருப்பு, பத்திரிகையாளர் குடியிருப்பு ஆகியவற்றுக்கு இடம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருளர் குடியிருப்பில் கட்டப்பட்ட வீடுகளை தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். தொடர்ந்து, இந்த தனியார் வீட்டு மனைப்பிரிவு வளாகத்தில் மேலும் 20 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும். அதனை செம்பாக்கம் ஊராட்சியில் சொந்தமாக மனை இல்லாதவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என செம்பாக்கம், அச்சரவாக்கம் கிராம மக்கள் கூறி வந்தனர்.இந்நிலையில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்க வலியுறுத்தி, நேற்று காலை 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு – திருப்போரூர் சாலையில் திரண்டனர். அங்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது.தகவலறிந்து திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் லில்லி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைய செய்தனர். ஆனால் பொதுமக்கள், கலெக்டர் நிலங்களை மீட்டு பட்டா வழங்குவதாக உறுதியளித்தால் போராட்டத்தை கைவிடுவோம் என கூறி தனியார் குடியிருப்பு வளாக நுழைவாயில் முன்பு அமர்ந்தனர்.இதையடுத்து செங்கல்பட்டு ஆர்டிஓ சாகிதா பர்வீன், மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் ஆகியோர், அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, செம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் உறுப்பினர்கள் கூறியதாவது. ‘செம்பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 20 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும். அந்த இடத்தில் சமத்துவபுரம் அமைக்க வேண்டும். மனை இல்லாத செம்பாக்கம் ஊராட்சி மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். மயானம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.அவர்களது கோரிக்கைகளை 10 நாட்களுக்குள் வருவாய்த்துறை மூலம் நிலம் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அந்த நிலம் மீட்கப்பட்டு அரசின் வசமாக்கப்படும். செம்பாக்கம் ஊராட்சியில் உள்ள மனை இல்லாதோர் குறித்து விஏஓ மூலம் கணக்கெடுத்து, அவர்களுக்கு பட்டா வழங்கப்படும். மயானத்துக்கு தனி இடம் ஒதுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆர்டிஓ உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்….

The post அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: