மாமல்லபுரம், செப். 26: மாமல்லபுரம் அருகே நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ₹55 ரூபாய் முதல் புரோக்கர்கள் கட்டாய வசூல் செய்வதாக கூறப்படுகிறது. புரோக்கர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்யும் அவல நிலை காணப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட முழுவதும் கடந்த சில மாதங்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், ஏரி குளம், கிணறு, குட்டைகளில் விவசாயம் செய்யும் அளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதையடுத்து, பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டு விளைச்சல் ஓரளவுக்கு இருந்தது. மாவட்டம் முழுவதும் நெல் பயிரிடப்பட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு அரசு 89 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கிராமப் பகுதிகளில் திறக்கப்பட்டன.
இதனால், பெருமளவு விவசாயிகள் வியாபாரிகளிடம் நெல்லை போடாமல், நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு, அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையுடன் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்கி விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்கிறது. வெளிச்சந்தை, விலையை விட அரசு அறிவித்துள்ள விலை ஆதாயமாக உள்ளதால், விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களிலேயே விற்க விரும்புகின்றனர். இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த தவறும் நடக்கக் கூடாது என்று அரசு கவனமாகவும் உறுதியாகவும் உள்ளது.
மேலும், நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிடகளிடம் இருந்து ஒரு பைசா வாங்கினாலும் அரசு வேடிக்கையும் பார்க்காது, பொறுத்தும் கொள்ளாது. இதனை, மீறி தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கையும் மீறி மூட்டைக்கு ₹55 முதல் ₹80 ரூபாய் வரை கட்டாய வசூல் நடைபெற்று கொண்டு தான் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை 89 நேரடி கொள்முதல் செயல் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், சுமார் 15 முதல் 20 நாட்கள் வரை மூட்டைகள் எடை போடாமல் வைக்கப்படுகின்றன. இதனால், நெல் மூட்டைகளை வைத்துக் கொண்டு விவசாயிகள் இரவு பகலாக காவல் காக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த எச்சூர், குழிப்பாந்தண்டலம், குச்சிக்காடு, நந்திமா நகர், நல்லான் பிள்ளை பெற்றாள், வடகடம்பாடி, பெருமாளேரி, கடம்பாடி, மணமை, மேல குப்பம், எடையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறும் வகையில், நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு, விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வருகின்றனர். அப்படி, கொண்டு வரப்படும் நெல்லை கோணிப்பையில் அடைத்து, எடை போட்டு லாரியில் ஏற்றாமல் 20 நாட்களுக்கும் மேலாக அடுக்கி வைத்துள்ளனர். இங்கு, விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய ஒவ்வொரு விவசாயிடம் இருந்தும் ₹55 முதல் ₹80 ரூபாய் வசூல் வேட்டை செய்யப்படுகிறது.
நேரடி, கொள்முதல் நிலையத்தில் வேலை செய்பவர்களிடம் விவசாயிகள் நேரடியாக சென்று நெல்லை கொண்டு போடுவதற்கு எப்போது கொண்டு வர வேண்டும் என்று கேட்டால், வெளியில் ஒரு கும்பல் இருக்கும் அவர்களிடம் மூட்டைக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என தெளிவாக கேட்டு தெரிந்துக் கொண்டு நெல்லை கொண்டு வாருங்கள் என கூறுகின்றனர். புரோக்கர்கள் தானாகவே முன்வந்து மூட்டைக்கு ₹55 ரூபாய் கொடுத்தால் 15 முதல் 20 நாட்கள் கழித்து தான் எடை போட்டு கோணிப்பையில் கட்டி லாரியில் ஏற்றி அனுப்புவோம். ₹1000 கொடுத்தால் 2 நாட்களில் ஏற்றி அனுப்புவோம். இதற்கு, சம்மதம் என்றால் நெல்லை கொண்டு வாருங்கள். இல்லை, வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று விடுங்கள் புரோக்கர்கள் விவசாயிகளை மிரட்டுகின்றனர்.
மேலும், மூட்டைக்கு ₹55 ரூபாய் பணம் தர மறுக்கும் விவசாயியின் நெல்லில், ஈரப்பதம் அதிகமாக உள்ளது. கல், மண் மற்றும் தூசிகள் அதிகம் உள்ளது எனக் கூறி சூப்பர்வைசர் மற்றும் மேஸ்திரி உள்ளிட்ட ஊழியர்கள் விவசாயிகளை மன உலைச்சளுக்கு ஆளாக்குகின்றனர். இதற்கு, பயந்து விவசாயிகள் பலர் வேறு வழியின்றி, கேட்கும் பணத்தை விட அதிகமாக கொடுக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். நெல் வியாபாரிகள், புரோக்கர்களிடம் கூட்டு சேர்ந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து மிக குறைந்த விலைக்கு வாங்கி, அந்த நெல்லை நெல் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து எடை போட்டு கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
நெல்லை சுத்தம் செய்ய அரசு சார்பில் இயந்திரம் வழங்கப்பட்டும். சுத்தம் செய்ய கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது. நெல் மூட்டையை எடை வைக்கவும் வசூல் செய்யப்படுகிறது. சுத்தம் செய்ய, மூட்டையை அடுக்கி வைக்க, ஏற்றி இறக்க, மூட்டையை தைக்க அரசு சார்பில், ஒரு குறிப்பிட்ட பணம் வழங்கப்படுகிறது. ஆனால், இவ்வாறு பணம் வழங்கப்படுவதை மறைத்து ஒவ்வொரு மூட்டைக்கும் விவசாயிகளிடம் இருந்து மெகா வசூல் வேட்டை நடக்கிறது. மேலும், நெல்லை கொண்டு வருபவர்கள் விவசாயிகள் தான் என்பதற்கு சான்றாக சிட்டா அடங்கலை ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட விஏஓவுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அதுபோல் செய்யவில்லை. இதனால், வியாபாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால், அதிகாரிகள் முதல் அரசியல் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் வரை கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் கொண்டு வரப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 நேரடி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்து, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படி, கொண்டு வரப்படும் நெல்லை காய வைக்காமல் ஈரத்தோடும், தூற்றி எடுக்காமல் அப்படியே எடை போட்டு லாரியில் ஏற்றுகின்றனர். அப்படி, ஏற்றி அனுப்பும் நெல் மூட்டையில் மூட்டைக்கு 5 கிலோ வீதம் தூசி இருக்கும். இதனால், அரசுக்கு கோடி கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது, ஒருபுறமிருக்க நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் வசூல் செய்யப்படும் பணத்தை பிரதான கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கு பிரித்து கொள்வதில் அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு ₹55 முதல் ₹80 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்வதை தடுத்து நிறுத்தி, கட்டாய வசூலில் ஈடுபடும் புரோக்கர்கள் உள்ளிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து விவசாயிகளிடம் வசூல் செய்த பணத்தை திரும்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் வசூல் செய்த பணத்தை திருப்பி தர வேண்டும். கொள்முதல் செய்த நெல்லுக்கு விரைவாக பணம் வழங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் 89 கொள்முதல் நிலையங்களில் நாள் கணக்கில் கொள்முதல் செய்யாமல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தனியார் வியாபாரிகள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி, நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து நெல்லை எடை போட்டு கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து வாங்கும் பணத்தை பங்கீட்டு கொள்ள பல்வேறு இடங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் இரவில் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்கின்றனர். எவ்வளவு, பணம் வசூலிக்க வேண்டும் என அரசியல் கட்சியின் ஒன்றிய செயலாளர்களே நிர்ணயம் செய்கின்றனர். கொள்முதல் நிலையங்களில் எடை போட்டுபவர்களும் பணம் கேட்கின்றனர். லாரி ஓட்டுனர்கள் மூட்டைக்கு 7 முதல் 8 ரூபாய் கொடுத்தால் தான் லோடு ஏற்றுவோம் என தொடர்ந்து கறார் காட்டுகின்றனர். வேறு வழியின்றி இவை அனைத்தும் விவசாயிகள் தலையில் தான் விழுகிறது. இவர்கள், செய்யும் தவறுக்கு விவசாயிகள் ஆகிய நாங்கள் தான் பலிகடா ஆகிறோம். அமைச்சரின் உத்தரவை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் செவி சாய்க்காமல் இருக்கும் வரை எந்த பயனும் இல்லை. கட்டாய வசூலை தட்டி கேட்கும் விவசாயிகளை அரசியல் கட்சியினர் மிட்டுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் இதுவரை கோடி கணக்கில் விவசாயிகளிடம் இருந்து கட்டாய வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.
* ஈரப்பத கருவி மூலம் பரிசோதனை செய்வதில்லை
நெல்லை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரும்போது, 18 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் இருக்க வேண்டும். அதற்கு, கீழ் இருந்தால் அதனை நன்கு காய வைத்து எடை போட வேண்டும். ஈரப்பதம் 18 சதவீதத்துக்கு மேல் உள்ளதா? அல்லது 18 சதவீதத்துக்கு கீழ் உள்ளதா? என நவீன கருவி மூலம் பரிசோதிக்க வேண்டும். ஆனால், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பரிசோதிப்பதே இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
புரோக்கர்கள் பிடியில் கொள்முதல் நிலையங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 அரசு நேரடி நெல் கெள்முதல் நிலையங்களும் புரோக்கர்கள் பிடியில் சிக்கி தவிக்கிறது. இதனால், வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு, வியாபாரிகளிடம் அதிக பணம் பெற்றுக் கொண்டு, இரவில் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினருடம் கூட்டு சேர்ந்து கொண்டு கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை புரோக்கர்கள் லாரியில் ஏற்றி அனுப்புகின்றனர்.
இரவோடு, இரவாக நெல் கொள்முதல்
விவசாயிகளில் நெல்லை மூட்டை கட்டி நாள் கணக்கில் அடுக்கி வைத்து விட்டு இரவோடு, இரவாக தனியார் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதனால், வியாபாரிகளும், அரசியல் கட்சியினரும் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
அமைச்சரின் எச்சரிக்கையை மீறி…
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கையும் மீறி விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு ₹55 முதல் ₹80 ரூபாய் வரை கட்டாய வசூலால் விவசாயிகள் மன வேதனையில் உள்ளனர்.
The post மாமல்லபுரம் அருகே நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் புரோக்கர்கள் பிடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: மூட்டைக்கு ₹55 ரூபாய் கட்டாய வசூல் வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யும் அவலம் விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.