காவேரிப்பட்டணம் : காவேரிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில், போலி ஆவணம் தயாரித்து, தந்தையின் நிலத்தை பதிவு செய்ய முயன்றவரை கண்டித்து, அவரது 3 சகோதரிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரம் ஊராட்சி, சாப்பிரத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி சின்னப்பிள்ளை.
இருவரும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டனர். இவர்களுக்கு கோவிந்தம்மாள், சந்திரா, முனியம்மாள் என்ற 3 மகள்கள் மற்றும் ரவிவர்மா என்ற மகனும் உள்ளனர். அனைவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதே ஊரில் உள்ள ராமனுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலத்தை, ரவிவர்மா போலியாக வாரிசு சான்றிதழ் மற்றும் ஆவணம் தயார் செய்து, காவேரிப்பட்டணம் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நேற்று, தனது மனைவி அமராவதியின் பெயரில் மாற்ற முயற்சி செய்துள்ளார். இதையறிந்த கோவிந்தம்மா, சந்திரா, முனியம்மாள் ஆகியோர், சப் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு சென்று, தங்கள் அனுமதி இல்லாமல் தம்பி ரவிவர்மா வாரிசு சான்றிதழ் பெற்று, போலியாக பத்திரம் செய்ய முயற்சி செய்கிறார் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, காவேரிப்பட்டணம் சார்பதிவாளர் (பொ) தென்றல், அந்த பத்திரத்தை ஆய்வு செய்தபோது, வாரிசு சான்றிதழ் மற்றும் போலி ஆவணங்களை கொடுத்து, பத்திரம் செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இதனால், அந்த போலி பத்திரத்தை ரத்து செய்து திருப்பி அனுப்பினார். இதனால் காவேரிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post காவேரிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தந்தையின் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து பதிவு செய்ய முயன்ற மகன் appeared first on Dinakaran.