தேசிய பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால் ஏற்க தயார் மதுக்கடைகளை குறைக்க பட்டியல் தயாரித்துள்ளோம்: அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு: தமிழ்நாட்டில் மதுக்கடைகளை குறைக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வர் நினைத்தால் ஒரே நாளில் மதுக்கடைகளை மூட முடியும் என திருமாவளவன் கூறியதற்கு, பலரும் பதில் கூறிவிட்டனர். கொள்கை ரீதியாக மதுவிலக்கு கொள்கையில் திமுகவுக்கு மாற்று கருத்தில்லை.

ஒரே நாளில் மூடினால் நடைமுறையில் என்ன ஆகும் என அனைவருக்கும் தெரியும். அதனால் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. படிப்படியாக மதுக்கடைகளை குறைக்கும் திட்டம் உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையில் எந்தெந்த கடைகள் வரும் என பட்டியலை தயாரித்து வருகிறோம். சில கிராமங்களில் பேசி, கடை வேண்டாம் என கூறியதும், அதனை அகற்றவும், மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஒன்றிய அரசு தேசிய அளவில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால், தமிழகத்திலும் செய்ய தயாராக உள்ளோம். கடைகளை மூட வேண்டும் என தொடர்ந்து கேட்டு கொண்டே வருகிறோம். எந்தெந்த கடைகளை மூட வேண்டும் என கண்டறிந்து, பட்டியல் கொடுத்துள்ளோம். ஆனால், மூடப்படும் கடைகள் குறித்து முடிவு செய்யப்படவில்லை. மது மற்றும் போதை பழக்கத்தை தவிர்க்க மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

அங்கீகரிக்கப்படாத மனைகளை வரைமுறைப்படுத்த போதிய அவகாசம் வழங்கிவிட்டோம். மீண்டும், மீண்டும் அவகாசம் கொடுப்பது சிரமமாக உள்ளது. இன்னும், 2 மாதம் அவகாசம் உள்ளது. சென்னையில் வீட்டு வசதி வாரிய வீடுகள் விற்காமல் உள்ளதை விற்பனை செய்ய, ஒரு கமிட்டி போட்டு, விற்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது வீடு கட்டும்போதே, இங்கு அவசியம் உள்ளதா? என அறிந்து, வீடு கட்டுகிறோம். வீடு தேவை இருக்காது என அறிந்தால், அங்கு கட்டுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post தேசிய பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால் ஏற்க தயார் மதுக்கடைகளை குறைக்க பட்டியல் தயாரித்துள்ளோம்: அமைச்சர் சு.முத்துசாமி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: