லெபனானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது; போர் பதற்றத்தால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்: எகிப்து, துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் கண்டனம்

பெய்ரூட்: ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது. போர் பதற்றத்தால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை நெருங்கும் நிலையில், இஸ்ரேல் – லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் 37 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 274 ஆக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கையானது 35 குழந்தைகள், 60 பெண்கள் உள்பட 492க்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும், 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள் உள்பட பல இடங்களை ஹிஸ்புல்லா ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தி வருவதால், அந்த இலக்குகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனால் லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக தங்கள் வீடுகள் மற்றும் ஆயுத கிடங்கு கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான லெபனான் குடிமக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய அளவிலான இடம்பெயர்வாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தேவைப்பட்டால் லெபனானில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார். இதற்கிடையே மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு எகிப்து, துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் படைகள் கொடூர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வரை நாடு முழுவதும் பொதுமக்கள் முன்னறிப்பின்றி வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது எதிரிப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக தங்களது வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வௌியிட்ட வீடியோ பதிவில், ‘லெபனான் மக்களுக்கு செய்தி ஒன்றை வழங்க விரும்புகிறேன். இஸ்ரேல் உங்களுக்கு எதிராக சண்டையிடவில்லை. காலங்காலமாக உங்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி வரும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக போராடுகிறோம். அவர்களின் ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவேதான் நீங்கள் அனைவரும் ஹிஸ்புல்லாவிடம் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறீர்கள். தயவு செய்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா;
காசாவை சுடுகாடாக மாற்றியது போன்று, லெபனானையும் சுடுகாடாக மாற்றுவதில் இஸ்ரேல் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஹிஸ்புல்லாவின் தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில், காசாவில் ஹமாஸ் அமைப்பின் இலக்குகளை அடித்து நொறுக்கியது போன்று லெபனானிலும் இறங்கியுள்ளது. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லாவின் 1,600 நிலைகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் அதிரடி தாக்குதலால், மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவின் எதிர் தாக்குதலுக்கு, இஸ்ரேலும் பதிலடி கொடுத்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஆபரேஷன் நார்தர்ன் அரோஸ்;
இஸ்ரேல் ராணுவம் லெபனானில் நடத்தி வரும் இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் நார்தர்ன் அரோஸ்’ என்று பெயரிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் லெபனானின் 1,300 ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் 650க்கும் மேற்பட்ட வான்வெளி தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா கட்டமைத்து வரும் போர் உள்கட்டமைப்பை இஸ்ரேல் ராணுவம் அழித்து வருகிறது. மத்திய கிழக்கில் காசாவில் தொடங்கிய போர் பதற்றம் லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளதால், இது முழு அளவிலான போராக மாறுமா? என்ற அச்சம் நிலவி உள்ளது.

எகிப்து, துருக்கி, ஈரான் கண்டனம்;
எகிப்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், ‘சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக தலையிட வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும் துருக்கி வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்திற்கு இழுத்து செல்லும்’ என்று கூறியுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன், ஐ.நா பொதுச் சபையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்க ஈரானை இஸ்ரேல் தூண்டுகிறது. எங்களது உரிமைகளையும், எங்களையும் பாதுகாக்கும் எந்தவொரு குழுவையும் நாங்கள் பாதுகாப்போம். ஆனால் அமைதியாக வாழ ஈரான் விரும்புகிறது. மத்திய கிழக்கில் அமைதியற்ற சூழலுக்கு நாங்கள் காரணமாக இருக்க விரும்பவில்லை. ஏனெனில் அதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் இஸ்ரேல் போரை உருவாக்க முயல்கிறது’ என்றார்.

லெபனானிடம் சக்தி இல்லை;
இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையே சுமார் 130 கிலோமீட்டர் எல்லை உள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதி மற்றும் லெபனானின் தெற்குப் பகுதியை உள்ளடக்கியது. இப்பகுதியை ‘நீலக் கோடு’ என்று அழைக்கின்றனர். லெபனான் மண்ணில் ெசல்வாக்குடன் இருக்கும் ஹிஸ்புல்லாவிடம் இஸ்ரேலுக்கு இணையான சக்தியில்ைல. குளோபல் ஃபயர் பவர் இன்டெக்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகின் 145 நாடுகளில், அதிகளவு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் தரவரிசை பட்டியலில் இஸ்ரேல் 18 வது இடத்தில் உள்ளது. அதேநேரம் லெபனான் 111வது இடத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

The post லெபனானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது; போர் பதற்றத்தால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்: எகிப்து, துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: