இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற பிரக்ஞானந்தா, மகளிர் அணியில் பங்கேற்ற வைஷாலி மற்றும் இந்திய செஸ் ஒலிம்பியாட் அணியின் கேப்டன் நாத் ஆகியோர் ஹங்கேரியில் இருந்து ஜெர்மன் வழியாக லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னைக்கு திரும்பினர். அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நிருபர்களிடம் நாத் கூறுகையில், முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளோம், ஏற்கனவே ரஷ்யாவுடன் இணைந்து ஒரு தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளோம். தற்போது தனித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளோம். இந்தியாதான் சிறந்த அணி என காட்டும் அளவிற்கு அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்றுள்ளோம்’ என்றார்.
வீராங்கனை வைஷாலி கூறுகையில், ‘தங்கப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில், வெண்கல பதக்கம் வென்றேன். அப்போது தங்கப்பதக்கம் வெல்ல முடியாதது மிகவும் வருத்தமாக இருந்தது. தற்போது தங்கப் பதக்கம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய ஆடவர் அணி அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பெண்கள் அணி, ஒரு போட்டியில் தோல்வியடைந்து, மற்ற 2 போட்டிகளை வென்றாக வேண்டிய நேரத்தில், இரண்டிலும் வெற்றி பெற்று, பதக்கத்தை வென்று உள்ளோம்’ என்றார். வீரர் பிரக்ஞானந்தா கூறுகையில், சென்னையில் நடந்த போட்டியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டோம், இந்த முறை அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. விளையாடிய அனைத்து போட்டிகளும், கடுமையாகவே இருந்தது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை தோற்கடித்ததும் நம் நாட்டிற்கு தங்க பதக்கம் உறுதியாகிவிட்டது. அனைவருக்கும் நன்றி’ என்றார்.
The post செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.