திருமலை : ஆந்திராவில் நேற்று அதிகாலை நடந்த இருவேறு சாலை விபத்துகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துக்கொண்டு திரும்பிய பக்தர்கள் உட்பட 7 பேர் பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் சிண்டிகேட் நகரை சேர்ந்த 4 பேர் நேற்று அதிகாலை காரில் நர்பலாவில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றனர். ரெகுலகுண்டா என்ற இடத்தில் இவர்களது கார் மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனந்தபூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் பெயர், விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.மற்றொரு விபத்து: நெல்லூர் வனத்தோப்பு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றனர்.
பின்னர் இவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை காரில் திருப்பதி மாவட்டம் சிலக்கூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி மீது இவர்களது கார் மோதியது. இதில் கன்டெய்னர் லாரியின் அடியில் கார் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த சிலக்கூர் போலீசார் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆந்திராவில் அதிகாலை இரு வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்த மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ராம்பிரசாத் ரெட்டி இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்ததோடு காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
The post ஆந்திராவில் அதிகாலை கோர விபத்து இருவேறு சாலை விபத்தில் பக்தர்கள் உட்பட 7 பேர் பலி appeared first on Dinakaran.