அமெரிக்க விபத்தில் காயமடைந்த அரியானா இளைஞர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!!

சண்டிகர்: அமெரிக்க விபத்தில் காயமடைந்த அரியானா இளைஞர் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு காயமடைந்த அரியானாவை சேர்ந்த இளைஞர் அமித்தை சந்தித்தார். காயமடைந்த அமித்திடம் அவரது குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள கோக்ரிபூர் கிராமத்திற்கு சென்று அமித்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் வருகை குறித்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லை என்றும், அவர் கோக்ரிபூர் கிராமத்தை அடைந்த பிறகுதான் தங்களுக்கு தகவல் தெரியவந்ததாக கர்னாலில் உள்ள உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அரியானாவில் சட்டசபை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் திடீர் வருகை அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.

ராகுலை சந்தித்த பின்பு அமித்தின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அமித் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், நிலத்தை விற்றும், வீட்டை அடமானம் வைத்தும்தான், அவருக்கு நிதியளித்தோம். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு, அமித் ஒரு விபத்தில் சிக்கினார். தற்போது, அவர் மோசமான நிலையில் இருக்கிறார்; அவரால் சரியாக சாப்பிடக்கூட முடியாமல், நிறைய பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார். இந்த நிலையில்தான், ராகுல் அவரை அமெரிக்காவில் சந்தித்துள்ளார். தொடர்ந்து, இங்கு வந்து எங்களையும் சந்தித்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.

The post அமெரிக்க விபத்தில் காயமடைந்த அரியானா இளைஞர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!! appeared first on Dinakaran.

Related Stories: