தூக்கில் ஒருவர், தரையில் மூவர் சடலங்கள்; மகாராஷ்டிராவில் அழுகிய நிலையில் 2 குழந்தைகள், தம்பதி உடல் மீட்பு: உர விற்பனையாளர் குடும்பத்தில் சோகம்


துலே: மகாராஷ்டிராவில் அழுகிய நிலையில் 2 குழந்தைகள் மற்றும் தம்பதிகளின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் துலே அடுத்த பிரமோத் நகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டிற்குள் சிலர் இறந்து கிடப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் மீட்புக் குழுவினரின் உதவியுடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தனர்.

அதையடுத்து 4 பேரின் சடலங்களையும் மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘விவசாய உர விற்பனையாளர் பிரவீன் மான்சிங் கிராசே, அவரது மனைவியான ஆசிரியை கீதா பிரவீன் கிராசே மற்றும் அவர்களது இரு குழந்தைகளான மிதேஷ் பிரவீன் கிராசே, சோஹம் பிரவீன் கிராசே ஆகியோரின் 4 சடலங்கள் மீட்கப்பட்டன. இவர்கள் நான்கு நாட்களுக்கு முன்பே இறந்திருக்க வேண்டும். வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்தில் பிரவீன் கிராசே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் விஷம் குடித்து பலியாகி உள்ளனர். எதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீட்டு வேலைக்காக வந்த பெண்ணும், வீடு பூட்டிய நிலையில் இருந்ததால் அவர்கள் ஊருக்கு சென்றிருக்க வேண்டும் என நினைத்து இரண்டு முறை திரும்பி சென்றுள்ளார். எனவே பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்’ என்று கூறினர்.

The post தூக்கில் ஒருவர், தரையில் மூவர் சடலங்கள்; மகாராஷ்டிராவில் அழுகிய நிலையில் 2 குழந்தைகள், தம்பதி உடல் மீட்பு: உர விற்பனையாளர் குடும்பத்தில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: