ராகுலுக்கு எதிராக தொடர் சர்ச்சை கருத்து பாஜவினரை ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள அறிவுறுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி: ராகுல் காந்திக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வரும் பாஜவினரை ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள அறிவுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே கடிதம் எழுதி உள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புடன் நேரடியாக தொடர்புடைய ஒரு பிரச்னையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு எதிராக மிகவும் ஆட்சேபனைக்குரிய, வன்முறை மற்றும் முரட்டுத்தனமான அறிக்கைகள் தொடர்வதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பாஜ தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் பயன்படுத்தும் வன்முறை வார்த்தைகள் எதிர்காலத்திற்கு கேடானவை. ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, ராகுலை நம்பர்-1 தீவிரவாதி என்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள உங்கள் கூட்டணி கட்சி எம்எல்ஏ ஒருவர், ராகுலின் நாக்கை அறுத்துக் கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவிக்கிறார்.

டெல்லி பாஜ முன்னாள் எம்எல்ஏ ஒருவர், ‘பாட்டியைப் போல் ஆக்கிவிடுவேன்’ என ராகுலை மிரட்டுகிறார். இந்த விஷயத்தில் கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் மிகவும் கொந்தளிப்புடனும் கவலையுடனும் உள்ளனர். இத்தகைய வெறுப்புணர்வு சக்திகளால், மகாத்மா காந்தி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்ய வேண்டியிருந்தது.

ஆளும் கட்சியின் இந்த அரசியல் நடத்தை ஜனநாயக வரலாற்றில் முரட்டுத்தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. தயவுசெய்து உங்கள் தலைவர்கள் ஒழுங்காக நடந்துகொள்ள அறிவுறுத்துங்கள். இந்திய அரசியல் சீரழிவதைத் தடுக்க இதுபோன்ற அறிக்கைகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுங்கள்.இவ்வாறு கூறி உள்ளார்.

The post ராகுலுக்கு எதிராக தொடர் சர்ச்சை கருத்து பாஜவினரை ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள அறிவுறுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: