உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 30 ஆன்மிக பயணிகள் விமானம், ரயிலில் சென்னை திரும்பினர்: பயணிகளை வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள்

சென்னை: உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக பயணமாக சென்று நிலச்சரிவில் சிக்கி, 4 நாட்களுக்கு மேலாக தவித்த தமிழகத்தை சேர்ந்த 30 பேர் ஒன்றிய, மாநில அரசுகள் உதவியால் பத்திரமாக மீட்கப்பட்டு, விமானம், ரயில் மூலம் நேற்று காலை சென்னை வந்தனர். அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்று, சொந்த ஊர்களுக்கு கார்களில் அனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டின் கடலூர், சிதம்பரம் பகுதிகளை சேர்ந்த 17 பெண்கள் உள்பட 30 பேர் கொண்ட குழுவினர் ஆன்மிக சுற்றுப்பயணமாக, கடந்த செப்டம்பர் 1ம் தேதி வட மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் முடிந்து சாலை வழியாக திரும்பிய போது, மீண்டும் தவாகரன்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பெருமளவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் தமிழக ஆன்மிக குழுவினர் 30 பேர் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் தகவல், தமிழ்நாடு முதல்வருக்கு கிடைத்தது. உடனடியாக அவர் கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் ஆகியோருடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

அதோடு உத்தரகாண்ட் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு, ராணுவத்தின் உதவியுடன் ஹெலிகாப்டர்கள் மூலமாக இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 30 பயணிகளும் பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு மீட்டு அழைத்து வரப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போன் மூலம் பேசி, ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் 2 வேன்களில், மீட்கப்பட்ட 30 ஆன்மிகப் பயணிகளும், டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, 20 பேர் கொண்ட குழுவினர், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 10 பேர் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் தங்க வைக்கப்பட்டு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று காலை 10 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்த ஆன்மிகப் பயணிகள் 10 பேரையும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வரவேற்று அவர்களை கார்கள் மூலம், சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

* முதல்வருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி
உத்தரகாண்டில் இருந்து சென்னை விமான நிலையம் திரும்பிய பயணிகள் அளித்த பேட்டி:
உத்தரகாண்ட் மாநிலத்தில், ஆதி கைலாஷ் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்புகையில், வழியில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, நாங்கள் அங்கு சிக்கிக் கொண்டு பெரும் அவதி அடைந்தோம். ஒரு கட்டத்தில் நாங்கள் மீண்டு வருவோமா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது. ஆனாலும் எங்களை ஆதி கைலாசர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு, செயல்பட்டோம். இதற்கிடையே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மிகுந்த அக்கறை எடுத்து, அரசு அதிகாரிகள் மூலம் எங்களை மீட்க நடவடிக்கை எடுத்தார்.

அதோடு எங்களை பத்திரமாக தங்க வைத்து, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். பின்பு மழை ஓய்ந்ததும் ஹெலிகாப்டர் மூலம் எங்களை பத்திரமாக மீட்டு, சாலை வழியாக டெல்லிக்கு அழைத்து வந்தனர். அதன்பின்பு எங்களை சிலரை விமானத்திலும் மற்றவர்களை ரயில் மூலமாகவும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்து, இப்போது எங்களுடைய ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதற்காக மத்திய, மாநில அரசுகள், குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும், எங்களை மிகுந்த பாதுகாப்புடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட, இந்திய ராணுவத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

The post உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 30 ஆன்மிக பயணிகள் விமானம், ரயிலில் சென்னை திரும்பினர்: பயணிகளை வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள் appeared first on Dinakaran.

Related Stories: