×
Saravana Stores

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா மீண்டும் சாம்பியன்; 5 வது முறையாக வென்று சாதனை

ஹூலுன்பியர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த இந்தியா 5வது முறையாக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. பரபரப்பான பைனலில் நேற்று சீனாவுடன் மோதிய இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. முதல் முறையாக பைனலில் விளையாடிய சீன வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தியதால் முதல் 3 கால் மணி நேர ஆட்டத்திலும் கோல் ஏதும் விழாமல் 0-0 என இழுபறி நீடித்தது. கடைசி கட்டத்தில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணிக்கு ஜுக்ராஜ் சிங் அற்புதமான ஃபீல்டு கோல் அடித்து வெற்றிக்கு உதவினார் (51வது நிமிடம்). முன்னதாக, 3வது இடத்துக்கு நடந்த மோதலில் பாகிஸ்தான் 5-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

* இதுவரை நடந்துள்ள 8 தொடரில் இந்தியா 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
* தொடர்ந்து 2வது முறையாக இந்தியா கோப்பையை தக்கவைத்துள்ளது. ஏற்கனவே 2016ல் மலேசியாவில் நடந்த போட்டியில் கோப்பையை வென்ற இந்தியா 2018ல் (ஓமன்) பாகிஸ்தானுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது.
* சென்னையில் கடந்த ஆண்டு நடந்த 7வது தொடரில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இப்போட்டி நடந்தது.
* 6 முறை பைனலில் விளையாடிய இந்தியா 5 முறை பட்டம் வென்றுள்ளது.
* லீக் சுற்றில் சீனாவுக்கு எதிராக முதல் கோல் போட்ட ஜுக்ராஜ், பைனலிலும் வெற்றி கோல் போட்டு அசத்தினார்.
* அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜிவூன் யாங் (9 கோல், கொரியா), இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (7 கோல்) முதல் 2 இடங்களை பிடித்தனர்.
* இந்த தொடரில் இந்தியா மொத்தம் 26 கோல் போட்டது (18 ஃபீல்டு கோல்). எதிராக 5 கோல் மட்டுமே அடிக்கப்பட்டன.

The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா மீண்டும் சாம்பியன்; 5 வது முறையாக வென்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Asian Champions Trophy Hockey ,India ,Hulunbier ,China ,Asian ,Dinakaran ,
× RELATED வீரர்களை வெளியேற்றும் இந்தியாவுடனான...