×

இந்தியா ஏ அணி மீண்டும் சொதப்பல்: முதல் இன்னிங்சில் ஆஸி. 62 ரன் முன்னிலை

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும், இந்தியா ஏ – ஆஸி ஏ இடையிலான அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்டின், 2ம் நாள் ஆட்டத்தில், இந்திய வீரர்கள் சொதப்பலாக ஆடி, 5 விக். இழப்புக்கு 73 ரன் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில், இந்தியா ஏ – ஆஸி ஏ அணிகள் இடையே அதிகாரப்பூர்வமற்ற இரு டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் ஆஸி வென்று முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரண்டாம் டெஸ்டின் முதல் நாளில் இந்திய வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆடியதால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பின் களமிறங்கிய ஆஸி அணி, 17.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு, 53 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்த ஆஸி வீரர்கள், 223 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஆஸி அணி, 62 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய வீரர்கள் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல் ராகுல் நேற்றைய போட்டியிலும் ஜொலிக்கவில்லை.

44 பந்துகளை எதிர்கொண்ட அவர், வெறும் 10 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். ஆஸி ஸ்பின்னர் கோரி ரோக்கிசியோலி, துல்லியமாக பந்து வீசி ராகுலுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தார். இந்தியா – ஆஸி இடையே பெர்த் நகரில் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா ஆட முடியாமல் போனால், துவக்க வீரராக ஆடும் வாய்ப்பு ராகுலுக்கு இருப்பதாக கருதப்பட்டது. இந்நிலையில், ராகுலின் மோசமான ஆட்டம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ராகுலை தொடர்ந்து மற்றொரு முன்னணி வீரர் அபிமன்யுவும், 17 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

டெஸ்ட் மேட்ச்சில் பேக்அப் ஓப்பனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அபிமன்யுவின் ஆட்டமும் கவலை அளிப்பதாக இருந்தது.  ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 73 ரன் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் 19, நிதிஷ் குமார் ரெட்டி, 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். நேற்றைய ஆட்டத்தில், ஆஸி பவுலர்களின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அந்த அணியின் நாதன் மெக்கன்ரோ 22 ரன்னுக்கு 2, பியு வெப்ஸ்டர் 14 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்தினர். இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடர உள்ளது.

The post இந்தியா ஏ அணி மீண்டும் சொதப்பல்: முதல் இன்னிங்சில் ஆஸி. 62 ரன் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : India A ,Aussies ,Melbourne ,Aussie A ,Australia ,Sothappal ,Dinakaran ,
× RELATED மெல்போர்னில் வீசும் பும்ரா புயல்;...