×

9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸியை சூறையாடிய பாக்.: 2ம் ஒரு நாள் ஆட்டத்தில் அதிரடி

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாக். அபாரமாக விளையாடி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள பாக் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு போட்டியில் ஆஸி வென்ற நிலையில், நேற்று, அடிலெய்ட் நகரின் ஓவல் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடந்தது.

முதலில் விளையாடிய ஆஸி வீரர்கள், துவக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தடுமாறினர். பாக். பவுலர்களின் சிறந்த பந்து வீச்சால், 163 ரன்களுக்கு ஆஸி வீரர்கள் சுருண்டனர். ஷாகின் ஷா அப்ரிடி 26 ரன் தந்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இவரின் துல்லிய பந்து வீச்சில், ஆஸியின் துவக்க வீரர்கள் மேத்யு ஷார்ட், ஜேக் பிரேசர்-மெக்குர்க் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஹாரிஸ் ராப் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறித்தார். பாக். கேப்டன் முகம்மது ரிஸ்வான் 6 கேட்சுகளை பிடித்தார்.

பின் களமிறங்கிய பாக். வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் சயீம் அயூப் 82, அப்துல்லா ஷபீக் 64 ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இந்த போட்டியில் பாக். 26.3 ஓவர்களில், 1 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்று சம நிலையில் உள்ளன. தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி போட்டி பெர்த் நகரில் நாளை நடக்க உள்ளது.

The post 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸியை சூறையாடிய பாக்.: 2ம் ஒரு நாள் ஆட்டத்தில் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Aussies ,Adelaide ,Australia ,Aussie ,
× RELATED 2வது டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸி. கை ஓங்கியது: 180க்கு இந்தியா ஆல் அவுட்