சுப நிகழ்ச்சிக்கு கூட குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என மிரட்டல் சுடுகாடு பாதை பிரச்னையில் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்

*குறைதீர்வு கூட்டத்தில் மண் பானைகளுடன் வந்து மக்கள் மனு

வேலூர் : வாழ்வாதாரத்தை காப்பாற்ற நூறு நாள் வேலை வழங்க வேண்டும். சுப நிகழ்ச்சிக்கு அழைக்கக் கூடாது,பொதுவழியை பயன்படுத்த கூடாது என்று எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர் என்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மக்கள் மண் பானைகளுடன் குறைதீர்வு கூட்டத்தில் மனுக்களை அளித்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் (முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்) கிராம மக்களுடன் வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 69 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தை சேர்ந்த 16 பேர், எனக்கு சொந்தமான இடத்தில் சுடுகாட்டு பாதை அமைப்பதற்காக எனது அனுமதியின்றி ஜேசிபி கொண்டு வந்து எனது நிலத்தில் இருந்த 100 வாழைகள், தென்னை மரங்களை அழித்தனர்.

இதுகுறித்து கடந்த ஆண்டு குடியாத்தம் போலீசில் புகார் செய்தேன். விசாரணை செய்யவில்லை. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட 16 பேரும் என்னையும், என் குடும்பத்தாரையும் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். சுப நிகழ்ச்சிக்கு எங்கள் குடும்பத்தினருக்கு அழைப்பு வழங்கக்கூடாது என மற்றவர்களை மிரட்டியுள்ளனர்.

எனது நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் குத்தகைக்கு எடுத்தவரை தேங்காய் எடுக்கக்கூடாது என மிரட்டுகின்றனர். பொதுவழிபாதையை நாங்கள் பயன்படுத்தக்கூடாது எனவும், எனது நிலத்தில் டிராக்டர் ஓட்டக்கூடாது என டிரைவரையும் தடுத்து நிறுத்தி பல வகையில் தொல்லை தருகின்றனர். இவர்களால் எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த சம்பவங்களில் கிராமத்தில் மண்பாண்டம் செய்து வரும் 30 குடும்பத்தினரான நாங்கள் ஊரைவிட்டு வெளியேறும் அளவுக்கு நெருக்கடி தருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த மகாலட்சுமி, ரம்யா ஆகியோர் அளித்த மனுவில், குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தில் வசிக்கிறோம். கடந்த 9ம் தேதி இரவு மதுபோதையில் சிலர், எங்களையும், எங்களையும், கணவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தனர். கணவர்கள் உள்ளிட்டோரை கத்தியால் தாக்கி காயம் ஏற்படுத்தினர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணைக்கட்டு அடுத்த ஈச்சங்காடு கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊராட்சியில் நூறுநாள் வேலை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களது வாழ்வாதாரம் இதில் தான் உள்ளது. நூறுநாள் வேலை திட்டம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், சுண்ணாம்புபேட்டை பரசுராமன் தெருவின் பின்புறம் மதுபானகடை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒருவர் கடை கட்டி வாடகைக்கு விட உள்ளார். கடை கொடுக்கவேண்டாம் என சம்பந்தப்பட்டவரிடம் கூறினோம். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை.

அங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் அப்பகுதியில் ரூ.3 கோடியில் நடந்து வரும் பூங்கா, நடைபயிற்சி சாலை அமைப்பதன் நோக்கமே சிதைந்து விடும். பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்படும். டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும். சத்துவாச்சாரியை சேர்ந்த ரமேஷ் என்பவர் அளித்த மனுவில், ‘வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலை அமைக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சாலை அமைத்தால் சாலை குறுகளாகி அப்பகுதி மக்களுக்கு பயனில்லாமல் போகும்.கருகம்புத்தூரை சேர்ந்த சலாம் மற்றும் ஊர் மக்கள் அளித்த மனுவில், ‘கருகம்புத்தூர் ஊராட்சியில் மாற்று மதத்தினர் சுடுகாடு அமைப்பதாக தெரிகிறது. எனவே அதனை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் மனு அளித்தனர்.

நீதிமன்ற வேலை வாங்கி தருவதாக ரூ.2.40 லட்சம் மோசடி

அணைக்கட்டு அடுத்த ஆண்டிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி அளித்த மனுவில், எனது மகனுக்கு வேலூர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்பவர் ரூ.2.40 லட்சம் வாங்கிக் கொண்டார். ஆனால் வேலை வாங்கி தரவில்லை.

பணமும் தரவில்லை. இதுகுறித்து எஸ்பி அலுவலகத்தில் கடந்த ஆண்டு புகார் செய்தேன். விசாரணையின்போது, வட்டியில்லாமல் பணத்தை திருப்பி தந்து விடுவதாக குப்புசாமி கூறினார். ஆனால் இதுவரை தரவில்லை. எனவே பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறியிருந்தார்.

The post சுப நிகழ்ச்சிக்கு கூட குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என மிரட்டல் சுடுகாடு பாதை பிரச்னையில் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர் appeared first on Dinakaran.

Related Stories: