மாவட்டத்தில் இன்று முதல் 16 நாட்களுக்கு தூய்மையே சேவை விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு

*குப்பை கொட்டும் 1200 இடங்களில் மரக்கன்று நட திட்டம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் இன்று முதல் 16 நாட்களுக்கு, தூய்மையே சேவை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்டத்தில் குப்பை கொட்டும் 1200 இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும், கழிவறை கட்டி தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே தூய்மையே சேவை திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளை உருவாக்குதல், முழு சுகாதாரத்தில் தமிழகம் முன்னோடி தமிழகம் என்ற குறிக்கோளை அடைய பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக மாற்ற ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊரக வாழ்வாதாரத் திட்டம் இணைந்து பணியாற்றி வருகின்றன. ஊராட்சிகளில் கழிவறை பயன்பாடு பற்றிய மனமாற்றத்தை கொண்டு வர தூண்டுதல், பயிற்சிகள், ஊக்குனர்கள், மகளிர் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டது. இந்த பயிற்சிகள் மூலம், மக்களிடையே கழிவறை பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கழிவறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) திட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) திட்டம் மூலம், இன்று (17ம்தேதி) தொடங்கி வரும் அக்டோபர் 2ம்தேதி வரை அனைத்து துறையினரும் 16 நாட்களுக்கு தூய்மையே சேவை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க வேண்டும். சுகாதார முன்னேற்றத்தின் மன மாற்றம் மற்றும் நடத்தை மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இன்று முதல் வரும் 2ம்தேதி வரை பொதுமக்களுடன் இணைந்து, பொது இடங்களில் பெருமளவில் தூய்மை பணி மேற்கொள்ளுதல், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை, தூய்மை காவலர்கள் மற்றும் இதர துப்புரவு பணியாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பசுமை மற்றும் தூய்மை கிராமங்களை நகர் பகுதிகளை உருவாக்குதல், மகளிர் குழுக்கள் மூலம் வீடுகளில் குப்பைகளை தரம்பிரித்து வழங்குதல், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்தல் மற்றும் பிளாஸ்டிக் மாற்று பொருள்களை உபயோகப்படுத்த வேண்டும்.

மேலும், பள்ளி, கல்லூரிகளில் சுகாதார மற்றும் குடிநீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் மேம்பாடு திட்டம், கல்வித்துறை, பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, அறநிலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை, மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் சமூகநலத்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து சுகாதாரம் மற்றும் குடிநீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். தூய்மையே சேவை நிகழ்ச்சியை திறம்பட செயல்படுத்தும் போது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தூய்மையே சேவை-2024 தூய்மையே எனது பழக்கம், தூய்மையே எனது வழக்கம் என்ற விழிப்புணர்வு பதாகையை கலெக்டர் வெளியிட்டார். கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவுரவ் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மணிவாசகம், உதவி திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் 1200 குப்பை கொட்டும் இடங்களை தேர்வு செய்து, அந்த இடங்களில் மரக்கன்று நட உள்ளோம். மேலும், தூய்மை காவலர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது,’ என்றனர்.

The post மாவட்டத்தில் இன்று முதல் 16 நாட்களுக்கு தூய்மையே சேவை விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: