மு.பரூர் வரதராஜபெருமாள் கோயிலில் மாடுகள் கட்டுவதால் சுகாதார சீர்கேடு

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மங்கலம்பேட்டை : கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகேயுள்ள மு.பரூர் கிராமத்தில் அமைந்துள்ளது வரதராஜபெருமாள் கோயில். பழமையும், பெருமையும் மிக்க இந்த கோயிலில் பிரம்மோற்சவம், ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், பவித்திர உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி, கோ பூஜை, விளக்கு பூஜை, புரட்டாசி திருமஞ்சனம், நவராத்திரி உற்சவம், அனுமன் ஜெயந்தி, வராக ஜெயந்தி, ராமநவமி, கோகுலாஷ்டமி மற்றும் மாதந்தோறும் சகஸ்ரநாம பாராயணம், சுவாதி சுதர்சன ஹோமம், அஸ்தம் திருவாய்மொழி சேவை, மாதப்பிறப்பு அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, ஏகாதசி, பிரதோஷம் என ஒவ்வொரு மாதமும் பல்வேறு விசேஷ சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

மேலும் திருமணம் ஆகாதவர்கள் சுவாமிக்கு கல்யாண உற்சவம் நடத்தினால் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும், ராகு கேது தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள் கருடனுக்கு திருமஞ்சனம் செய்து 7 வாரம் 8 அகல் விளக்கு ஏற்ற திருமணம் கைகூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், புதன்கிழமை, சனிக்கிழமை போன்ற பெருமாள் சுவாமிக்கு உகந்த நாள்களில் வழிபடுவதற்காகவும் மு.பரூர் மட்டுமல்லாது சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள், விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கோயிலை சுற்றிலும் மாடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மாடுகளின் கழிவுகள் கோயிலை சுற்றிலும் படர்ந்திருப்பதோடு, கோயிலுக்கு எதிரில் உள்ள குளத்திலும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் கோயிலைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள், ஈக்கள் அதிகமாக உலவுகின்றன. மேலும் வைக்கோல் போர், டிராக்டர்கள், டயர் வண்டிகள், உழவுக் கருவிகள், கார்கள் போன்றவை ஆங்காங்கே நிறுத்தப்படுவதாலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறுகளும், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் உள்ள இந்த கோயிலை நிர்வகிப்பவர்கள் கோயிலைச் சுற்றிலும் உள்ள இடர்பாடுகள், மாடுகளை அகற்ற வேண்டும் என்றும், யாரும் ஆக்கிரமிக்காத வகையில் பூங்கா அமைத்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

The post மு.பரூர் வரதராஜபெருமாள் கோயிலில் மாடுகள் கட்டுவதால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Related Stories: