×
Saravana Stores

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு

சிதம்பரம்: உத்தரகாண்டில் நிலச்சரிவு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று மாலை டெல்லி திரும்புகின்றனர். அங்கிருந்து நாளை சென்னை வந்து பின்னர் சிதம்பரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்பு பணிக்கு பெரும் முயற்சி எடுத்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த வசந்தா (58), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), விஜயலட்சுமி (62), வாசுகி (60), குமாரி (61), பராசக்தி (75) உள்ளிட்ட 17 பெண்கள் உள்பட 30 பக்தர்கள், கடந்த 1ம் தேதி ஆன்மிக சுற்றுலா பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சாலை மார்க்கமாக சென்றனர். ஆதி கைலாஷ் கோயிலுக்கு செல்வதற்கு முன்பே உத்தரகாண்ட் நகரத்தில் உள்ள பல்வேறு கோயிலுக்கு சென்றனர். உத்தகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்குள்ள ஒரு மடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆதி கைலாஷ் கோயிலுக்கு வேனில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மீண்டும் டெல்லி திரும்ப முடிவு செய்தனர்.

நேற்று முன்தினம் மதியம் பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்றபோது ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ள தவாகாட்- தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தவாகாட் என்ற இடத்தின் அருகே வந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 30 பக்தர்கள் அந்த இடத்திலேயே சிக்கித் தவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி சிதம்பரத்தில் உள்ள உறவினர்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றும்படி கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் ஆலோசித்தனர்.

தொடர்ந்து சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோரகர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அவர்களை பாதுகாக்கும்படி கூறினார். தகவல் அறிந்த உத்தரகாண்ட் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். நேற்று மழை விட்டதால் தாவாகாட் கிராமத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். தொடர்ந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டார்சுலா என்ற இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், மீட்கப்பட்டவர்களை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

டார்சுலாவில் இருந்து 30 பேரும் இன்று டெல்லிக்கு வேனில் புறப்பட்டுள்ளனர். இன்று மாலை 5 மணி அளவில் அவர்கள் டெல்லி சென்றடைகிறார்கள். பின்னர் விமானம் மூலம் சென்னைக்கு நாளை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 30 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கு மருத்துவம், உணவு, தங்குமிடம் வசதி அளித்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிப்பதாக சிதம்பரத்தில் உள்ள உறவினர்கள் தெரிவித்தனர்.

 

The post உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Delhi ,Tamil government ,Chidambaram ,Tamils ,Chennai ,Government of Tamil Nadu ,Mu. K. Stalin ,Tamil Nadu government ,
× RELATED உத்தரகாண்டில் பரபரப்பு 17வயது சிறுமியுடன் உறவு 19 பேருக்கு எய்ட்ஸ் உறுதி