×

புதிதாக அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் 40 கூண்டுகள் அமைப்பு; ஆண்டுதோறும் 27,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டம்: அதிகாரிகள் தகவல்


சென்னை மாநகரில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் பகல் நேரங்களில் உயிருக்கு ஆபத்து என்றால் தெரு நாய்களால் மற்றொரு புறம் வாகன ஓட்டிகள், சாலைகளில் நடந்து செல்பவர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பகலிலும் இரவு நேரங்களிலும் கூட்டம் கூட்டமாக தெருக்களில் வலம் வரும் தெருநாய்கள், பள்ளிக்கு செல்லும் சிறுவர்களையும், வாகனங்களையும் கூட்டமாக துரத்துவது சென்னை மாநகர தெருக்களில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகளாக உள்ளது. குறிப்பாக, அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோர், இரவு வேலை முடித்து வீடு திரும்புவோர், ரயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்வோர், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், முதியோர் என தெருநாய்கள் பயமுறுத்தாதவர்கள் பாக்கி இல்லை. காலை நேரத்தில் வாக்கிங் செல்லக்கூட முடிவதில்லை.

குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதனால், இருசக்கர வாகனத்தில் செல்வபவர்கள் நாயிடம் இருந்து தப்பிக்கவும், அதே நேரத்தில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும் எண்ணி பதற்றமடைந்து கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் தொடர் கதைகளாகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கடுமையான சட்டங்கள் காரணமாக நாய்களை கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை 34,640 சாலைகள் மற்றும் தெருக்கள் உள்ளன. சென்னையில் 2018ம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கிடும் பணி நடைபெற்றது. அப்போது 59 ஆயிரம் நாய்கள் இருந்தன. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெற்றது.

அதன்படி, சென்னை மாநகராட்சி மண்டலங்கள் வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 1,81,347 தெரு நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. நாய்கள் பிரச்னை குறித்து தினமும் மாநகராட்சிக்கு ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் புகார்கள் வந்து கொண்டிருக்கிறன. மாநகராட்சியும், குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று நாய்களைப் பிடித்து செல்கின்றனர். ஆனாலும், நாய்கள் பிரச்னைக்கு ஒரு முடிவு இல்லாமல் உள்ளது. இதற்காக, சென்னை மாநகராட்சி ஆய்வு மேற்கொண்டு சென்னை மாநகராட்சியில் இருக்கும் 15 மண்டலங்களுக்கும் தனித்தனிக் குழுக்கள் அமைத்து, சென்னையில் இருக்கும் இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, கால்நடை உதவி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சைக்குப் பின்னர், நாய்கள் மீண்டும் அதே பகுதியில் விடப்படுகின்றன.

ஆனால், தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் 3 இடங்களில் ரூ.19 கோடியில் ‘நாய் கருத்தடை மையம்’ அமைக்கும் பணி நடந்து வந்தது. இப்பணிகள் முடிவடைந்து, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இதன்மூலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருநாய்களை பிடித்து, அதற்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஆண்டுக்கு 24000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வந்த நிலையில் இனிமேல் ஆண்டு 27ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம் தீட்டி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு 14,885 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் முதல் முறையாக நாய்களுக்கென பிரத்யேக இனக்கட்டுப்பாட்டு மையம் சென்னை விலங்குகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த மையங்களில் தினமும் தலா 30 நாய்களுக்கு என ஆண்டுக்கு 9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் நாய் கருத்தடை சிகிச்சை ஆண்டுக்கு 27,000-ஆக அதிகரிக்கும்.

புதிதாக அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் 100 நாய்களைப் பராமரிக்கும் வகையில் 40 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில், வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெருநாய்களுக்கு அதிக அளவில் கருத்தடை செய்வதன் மூலம் சென்னை மாநகரில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

2023ம் ஆண்டில் 14,885 கருத்தடை
சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்களைப் பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன. இதில் 80 பணியாளர்கள் அதாவது, ஒரு வண்டிக்கு 5 நபர்கள் என்ற கணக்கில் உள்ளனர். சென்னையில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 15,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2023ம் ஆண்டில் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு, 14,885 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் தற்போது வரை 9 ஆயிரத்து 607 நாய்கள் பிடிக்கப்பட்டு, 6 ஆயிரத்து 966 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

The post புதிதாக அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் 40 கூண்டுகள் அமைப்பு; ஆண்டுதோறும் 27,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ...