சமூக வலைதளங்களில் 100 கோடி ரசிகர்கள்: கால்பந்து `கிங்’ ரொனால்டோ புதிய சாதனை


மும்பை: உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமூக வலைதள கணக்குகளை மொத்தமாக 100 கோடி ரசிகர்கள் பின் தொடர்ந்து உள்ளனர். சில நாட்கள் முன்பு துவக்கப்பட்ட அவரது யூடியூப் சேனல் பல்வேறு சாதனைகளை உடைத்தது. சேனல் தொடங்கப்பட்ட 21 மணி நேரத்தில் அவரது யூடியூப் சேனலை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்தனர். அடுத்த சில நாட்களில் 6 கோடி ரசிகர்கள் அவரது யூடியூப் சேனலை பின்தொடரத் துவங்கி உள்ளனர்.

தற்போது அவரது யூடியூப் சேனலை 6.05 கோடி மக்கள் பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 63.9 கோடி ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் அதிக மக்களால் பின் தொடரப்படும் ஒரே நபர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் லியோனல் மெஸ்ஸி உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 50 கோடி ரசிகர்கள் உள்ளனர். ஃபேஸ்புக்கில் 17 கோடி ரசிகர்களும், எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் 11.3 கோடி மக்களும் ரொனால்டோவை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அடுத்து ரொனால்டோவை சீன சமூக வலைதள செயலிகளான குவாய்ஷோ மற்றும் வெய்போ-வில் மொத்தமாக 1.7 கோடி ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 100 கோடி மக்கள் அவரை பல்வேறு சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த சாதனையை செய்த முதல் நபர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் விராட் கோஹ்லிக்கு சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். எனினும், அனைத்து சமூக வலைதளங்களிலும் சேர்த்து 50 கோடி ரசிகர்களை கூட விராத் கோஹ்லி எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post சமூக வலைதளங்களில் 100 கோடி ரசிகர்கள்: கால்பந்து `கிங்’ ரொனால்டோ புதிய சாதனை appeared first on Dinakaran.

Related Stories: