டைமண்ட் லீக் தடகள சாம்பியன் ஷிப் இறுதிச்சுற்று: ஈட்டி எறிதலில் பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?


பிரஸ்சல்ஸ்: முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட இந்த லீக்கின் இறுதி சுற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்க 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஈட்டி எறிதலில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் இறங்குகிறார். இதுவரை 90 மீட்டர் இலக்கை கடக்காத சோப்ரா இந்த முறை அதை தாண்டி தங்கம் வெல்வாரா..? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், செக் குடியரசின் ஜாகுப் வாடில்ச் ஆகியோர் நீரஜ் சோப்ராவுக்கு சவால் தர உள்ளனர்.

மொத்தம் 6 வீரர்கள் இறுதிச்சுற்றில் பங்கேற்கின்றனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், காயம் காரணமாக டைமண்ட் லீக் தொடரின் கடைசி 3 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் தகுதிபெற இயலவில்லை. குடல் இறக்கத்தால் அவதிப்பட்டு வரும் 26 வயதான நீரஜ் சோப்ரா, இந்த சீசனின் இறுதி போட்டியான டைமண்ட் லீக் முடிந்த பின்னர் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு டைமண்ட் லீக் பைனலில் 88.44 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்த முறையும் பதக்கம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.52 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெறுகிறது.

இதனை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. 3 ஆயிரம் மீட்ட ர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் ஏற்கனவே தகுதிபெற்ற சில வீரர்க ள் விலகியதால் இந்தியாவின் அவினாஷ் சாப்லேவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அவர் 12 வீரர்களில் ஒருவராக தயாராகி வருகிறார். இந்த போட்டி இன்று நள்ளிரவு 12.39 மணிக்கு நடைபெற உள்ளது. டைமண்ட் லீக் பைனலில் முதலிடம் பிடிக்கும் வீரர்களுக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.25 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அத்துடன் அடுத்த ஆண்டு நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கும் நேரடியாக தகுதி பெறுவர்.

The post டைமண்ட் லீக் தடகள சாம்பியன் ஷிப் இறுதிச்சுற்று: ஈட்டி எறிதலில் பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா? appeared first on Dinakaran.

Related Stories: