ரசாயன பயன்பாடின்றி இனி விளைபொருளை பாதுகாக்கலாம் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைப்பு

*விவசாயிகள், வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் ஜாக்பாட்

ஈரோடு : ரசாயன மருந்துகள் இன்றி நீண்டகாலத்திற்கு விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு மட்டும் மொத்தமாக ரூ.42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இன்றைய சூழலில் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை பெருக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள போதிலும் உரிய விலை கிடைப்பதில்லை என்பதால் விவசாயிகள் நஷ்டங்களை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதையடுத்து விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் உள்ள இடர்ப்பாடுகளை களைந்திடவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், வேளாண் தொழிலை அடிப்படையாக கொண்ட ஈரோடு மாவட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்யவும், உரிய விலை கிடைக்கும் வரை விளைபொருட்களை பாதுகாக்கவும் ஈரோடு விற்பனைக்குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் ஈரோடு விற்பனைக் குழுவில் 14 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும் 4 மறைமுக ஏலமுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும் செயல்பட்டு வருகின்றது.

இவ்விற்பனைக் கூடங்களுக்கு மஞ்சள், தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலைக்காய், எள், மக்காச்சோளம், நெல், கரும்பு சர்க்கரை, பயறு வகைகள், பருத்தி, புகையிலை, சூரியகாந்தி விதைகள் மற்றும் இதர விளைபொருட்களை விவசாயிகள் கொண்டு வந்து நேரடியாக வியாபாரிகளிடம் போட்டி விலைக்கு விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர்.

இது குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது: ஈரோடு விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 67154 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் உள்ளன. இக்கிடங்குகளில் விவசாயிகள் தங்களுடைய வேளாண் விளைபொருட்களை விலை வீழ்ச்சிக் காலங்களில் குறைந்த வாடகையில் இருப்பு வைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இருப்பு வைத்த விளைபொருட்களுக்கு விற்பனைக்குழுவின் சார்பில் 5 சதவீத வட்டியில் ரூ.5 லட்சம் வரையிலும், வியாபாரிகளுக்கு 9 சதவீத வட்டியில் தொகை ரூ.2 கோடி வரையிலும் பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகின்றது.

மேலும், பெருந்துறை, அவல்பூந்துறை, எழுமாத்தூர், கொடுமுடி, சிவகிரி, அந்தியூர், பூதப்பாடி, மைலம்பாடி, சத்தியமங்கலம் மற்றும் வெள்ளாங்கோவில் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 43 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய சேமிப்பு கிடங்குகள், கிடங்குகள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கிடங்குகளில் இருப்பு வைக்கும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு மின்னணு சேமிப்பு கிடங்கு ரசீதுகள் மூலம் வங்கிகளில் விளைபொருட்களின் மதிப்பில் அதிகபட்சம் 70 சதவீதம் வரை பொருளீட்டுக்கடன் பெற முடியும்.

இதேபோல், விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை அதன் தன்மை மாறாமல் நீண்ட நாட்களுக்கு சிறந்த முறையில் பாதுகாத்திடும் வகையில், ஈரோடு விற்பனைக்குழுவில் உள்ள கோபிசெட்டிபாளையம் (அளுக்குளி – 1000 மெ. டன்), சத்தியமங்கலம் (125 மெ. டன்), புஞ்சைபுளியம்பட்டி (25 மெ. டன்), அந்தியூர் (25 மெ. டன்)., கொடுமுடி (25 மெ. டன்), அவல்பூந்துறை (25 மெ. டன்), தாளவாடி (500 மெ. டன்) மற்றும் பர்கூர் (500 மெ. டன்) என 8 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் குளிர்பதனக் கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இக்கிடங்குகளில் மஞ்சள், துவரை, உளுந்து, கொள்ளு, பச்சைச்பயறு, மிளகாய், கொத்தமல்லி மற்றும் புளி ஆகிய விளைபொருட்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இ நாம் திட்டத்தில் விரைவில் மஞ்சள்

நேஷனல் அக்ரிகல்ச்சர் மார்க்கெட் (இ நாம்) என்பது இந்திய மின்னணு வர்த்தக போர்டல் ஆகும். இது ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இ நாம் மூலம் விற்பனை செய்வதால் போட்டி விலை கிடைக்கின்றது. இ நாம் மூலம் மஞ்சள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஈரோட்டில் 4 இடங்களில் தனித்தனியாக மஞ்சள் ஏலம் நடப்பதால் இ நாம் மூலம் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் முடிவு எட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரசாயனம் இனி இருக்காது

ஈரோட்டில் உள்ள மஞ்சள் குடோன்கள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட குடோன்களில் விளைபொருட்களை இருப்பு வைக்கும் போது ரசாயன மருந்துகளை மாதம் ஒரு முறை பயன்படுத்தும் நிலை உள்ளது. அவ்வாறு ரசாயன மருந்துகளை பயன்படுத்தும் போது அந்த விளைபொருளின் தன்மை பாதிக்கப்பட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில் குளிர்பதன கிடங்குகளில் விளைபொருட்களை பாதுகாக்கும் போது ரசாயன மருந்துகளை பயன்படுத்த தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ரசாயன பயன்பாடின்றி இனி விளைபொருளை பாதுகாக்கலாம் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: