கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகளில் ரூ.76.50 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

*கலெக்டர் ஆய்வு

மஞ்சூர் : கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகளில் ரூ.76.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் கான்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மஞ்சூர் மேல்பஜார் பகுதியில் ரூ.9.50 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

கீழ்குந்தா பேரூராட்சியில் சிறப்பு பகுதி மேம்பாடுத்திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பகுதிக்கு சென்ற கலெக்டர் பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ததுடன் சுகாதார நிலையத்தில் நாய் மற்றும் பாம்பு கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பேரூராட்சிகுட்பட்ட குந்தா கோத்தகிரிக்கு சென்ற அவர் அங்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் துணை சுகாதார நிலையத்தின் கட்டுமான பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை தரமாகவும், விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

குந்தா கோத்தகிரியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் இயங்கி வரும் குழந்தைகள் மையத்தை பார்வையிட்டதுடன் குழந்தைகளின் எடை மற்றும் உயரம், குழந்தைகள் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார். மேலும், அவலாஞ்சி அணையை பார்வையிட்ட கலெக்டர் அணையில் அமைக்கப்பட்டுள்ள மழையளவை கணக்கெடுக்கும் மழை மானி கருவியை ஆய்வு செய்து அதன் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக, குந்தா தாலுகாவில் பருவமழை சமயங்களில் நிலச்சரிவு மற்றும் இயற்கை பேரிடர் பாதிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்ட ஓணிகண்டி அண்ணாநகர், அன்னமலை, காமராஜ்நகர், தொட்டகொம்பை, சேரனுார், சிவசக்தி நகர் பகுதிகளில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகமது ரிஸ்வான், குந்தா தாசில்தார் கலைச்செல்வி, கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகளின் செயல் அலுவலர் மனோகரன், உதவி பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் வருவாய், பேரூராட்சி துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகளில் ரூ.76.50 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: