பேச்சுவார்த்தைக்கு மறுத்த ஜூனியர் டாக்டர்கள் பதவி விலக தயார் மம்தா அதிரடி: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: பேச்சுவார்த்தைக்கு ஜூனியர் டாக்டர்கள் மறுப்பு தெரிவித்தால் மக்களின் நலனுக்காக தான் முதல்வர் பதவியிலிருந்து விலகவும் தயாராக இருப்பதாக மம்தா அதிரடியாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் இரவுப் பணியின் போது பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் ஜூனியர் டாக்டர்கள் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மற்றும் சுகாதார துறையின் 2 மூத்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி மாலை 5 மணிக்கு முதல்வர் மம்தா வந்த நிலையில், ஜூனியர் டாக்டர்கள் குழு 25 நிமிடங்கள் தாமதமாக 5.25 மணிக்கு வந்தனர். இந்த பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமென அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். ஆனால் அரசு தரப்பில் அதற்கு சம்மதிக்கவில்லை. அதே சமயம், முழு பேச்சுவார்த்தையும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் ஆவணங்கள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதனை ஜூனியர் டாக்டர்கள் ஏற்கவில்லை.
இதனால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாக முதல்வர் மம்தா காத்திருந்தார். இறுதியில் இரு தரப்பும் விட்டுக் கொடுக்காததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி கூறியதாவது: மேற்கு வங்க மக்களின் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்பிரச்னை இன்றோடு முடிவுக்கு வரும் என நினைத்திருப்பீர்கள். அது நடக்கவில்லை. நான் 2 மணி நேரம் காத்திருந்தேன். இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதற்காக, மேற்கு வங்க மக்களின் நலனுக்காக எனது முதல்வர் பதவியை கூட ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். சிலர் வெளியில் இருந்து சதி செய்கின்றனர். அவர்களுக்கு தேவை நியாயம் அல்ல. முதல்வர் இருக்கை. அதனால் பேச்சுவார்த்தை நடக்கவிடாமல் தடுக்கின்றனர்’’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவும், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் நோயாளிகள் நலக்குழுவின் உறுப்பினருமான சுதிப்தோ ராயிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

* நேரடி ஒளிபரப்பு வேண்டும்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் கூறுகையில், ‘‘முதல்வர் மம்தாவின் கருத்து துரதிஷ்டவசமானது. எங்கள் கோரிக்கைகள் நியாயமானவை. வெளிப்படைத்தன்மைக்காக நாங்கள் நேரடி ஒளிபரப்பை கேட்கிறோம். முதல்வர் பதவி விலக வேண்டுமென நாங்கள் கேட்கவில்லை. அதற்காக இங்கு வரவில்லை. கொலையான பெண் டாக்டருக்கு நீதி வேண்டும். எனவே, எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’’ என்றனர்.

The post பேச்சுவார்த்தைக்கு மறுத்த ஜூனியர் டாக்டர்கள் பதவி விலக தயார் மம்தா அதிரடி: மேற்கு வங்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: