ஜம்மு-காஷ்மீர், அரியானா தேர்தல் நேரத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு: பட்ஜெட்டில் அறிவிக்காத நிலையில் திடீர் ஒப்புதல்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர், அரியானா தேர்தல் நேரத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின்கீழ், வருமானத்தின் அடிப்படையாக கொள்ளாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின்கீழ் நாட்டின் 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 6 கோடி மூத்த குடிமக்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீடு சேவையைப் பெற்று பயனடைவர்.

தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு புதிய காப்பீடு அட்டை விரைவில் வழங்கப்படும்’ என்றார். 70 வயதான அனைவருக்கும் இலவச காப்பீடு திட்டம் என்பது மத்தியில் 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள பாஜகவின் முந்தைய மக்களவை தேர்தல் வாக்குறுதியாகும். ஆனால், இதுகுறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாலை வசதி இல்லாத 25,000 கிராமங்களுக்கு போக்குவரத்து இணைப்பை வழங்குவதற்காக 62,500 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறையின் முன்மொழிவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அடுத்த 8 ஆண்டுகளில் 31,350 மெகாவாட் திறன்கொண்ட நீர்மின் நிலையங்களைக் கட்டமைப்பதற்கான திட்டங்களுக்கு ரூ.12,461 கோடி நிதியை ஒன்றிய அமைச்சரவை ஒதுக்கீடு செய்தது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10,900 கோடி செலவிலான ‘பி.எம். இ-டிரைவ்’ சிறப்புத் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின்மூலம் 24.79 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள், 14,028 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான நிதிச் சலுகைகள் அல்லது மானியங்களை ஒன்றிய அரசு வழங்கும். இந்த வாகனங்களுக்காக நாடு முழுவதும் 88,500 மின்னேற்று (சார்ஜ்) நிலையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீர், அரியானா தேர்தல் நெருங்கும் நிலையில், 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

 

The post ஜம்மு-காஷ்மீர், அரியானா தேர்தல் நேரத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு: பட்ஜெட்டில் அறிவிக்காத நிலையில் திடீர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: