சாத்தான்குளம்: மழை காலத்தில் தண்ணீர் புகுவதை தடுக்க சாத்தான்குளம் ஜெபநாதபுரம் பகுதியில் உள்ள ஜெப ஆலயத்தை ஜாக்கி மூலம் 3 அடிக்கு உயர்த்தி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சாத்தான்குளம் ஜெபஞானபுரம் பகுதியில் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட சிற்றாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரதிஷ்டை விழா, அசனப்பண்டிகை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் காலரா நோய் பரவியபோது இந்த ஆலயத்தை ஓலை குடிசையில் அமைத்து மக்கள் வழிபட்டதையடுத்து நோயின் தாக்கம் குறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர். இதையடுத்து சபை மக்கள் ஒன்று கூடி ஆலயத்தை புதுப்பித்து 1940ம் ஆண்டு புதிதாக கட்டினர். இந்த ஆலய கோபுரம் 40 அடி உயரத்தில் உள்ளது.
தற்போது இப்பகுதி தெருவில் சாலை உயர்ந்ததால் ஆலயத்தின் அடிப்பகுதி தாழ்ந்து போனது. இதனால் சிறிது மழை பெய்தாலும் ஆலயத்துக்குள் தண்ணீர் புகுந்து தேங்கியது. இதனால் சபை மக்கள் ஆலோசனை நடத்தி கட்டிடத்தின் தன்மை மாறாமல் இருக்கும் வகையில் அடிப்பகுதியில் 3 அடி உயர்த்த முடிவு செய்தனர். இதையடுத்து சென்னையில் உள்ள நிறுவனத்தின் ஆலோசனைப்படி ஜாக்கி மூலம் ஆலயத்தின் அடிப்பகுதியை 3 அடி உயர்த்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ஆலயத்தின் அடிப்பகுதி கட்டுமானத்தை சுற்றி 100க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் பொருத்தப்பட்டு கட்டிடத்தை மேலே தூக்கும் பணி நடந்து வருகிறது. 25க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இருவார காலமாக நடந்து வரும் இப்பணி, இன்னும் ஒரு வாரத்தில் முடிக்கப்படுமென கூறப்படுகிறது.
உலகம் முழுதும் தொழில்நுட்பம் பிரபலமாகி விட்டாலும் சாத்தான்குளம் போன்ற கிராமப் பகுதியில் முதல் முறையாக ஜாக்கி மூலம் கட்டிடத்தின் உயரம் அதிகரிக்கும் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் இப்பணியை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து ஆலய சபை மக்கள் கூறுகையில், இந்த ஆலயத்தின் கட்டிடத்தை பழமைமாறாமல் இருக்க அடி பகுதியை மட்டும் 3 அடி உயர்த்திட முடிவு செய்தோம். இதற்காக சென்னையில் உள்ள நிறுவனத்தினடம் கேட்ட போது ஜாக்கி அமைத்து எளிதில் மாற்றிவிடலாம் என தெரிவித்தார். அதன்படி இப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்தில் ஆலயம் 3 அடி உயர்த்தப்பட்டு விடும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு ஆலய தளத்தை அலங்கரித்து அமைக்க முடிவு செய்துள்ளோம். ஆலய கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டினால் ஆலயத்தின் பழைய தன்மை மாறி விடும் என்பதால் 3 அடி உயர்த்தி அமைக்க இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம், என்றனர்.
The post மழைக் காலத்தில் தண்ணீர் புகுவதை தடுக்க ஜாக்கி மூலம் 3 அடி உயர்த்தப்படும் சாத்தான்குளம் ஜெப ஆலயம்: பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.