திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). இவரது உறவினர் முருகன்(38), இருவரும் விவசாயிகள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அருகே உள்ள நூக்காம்பாடி கிராமத்திற்கு சென்றுவிட்டு, மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். கிளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் மகன் தர்மராஜ்(20), முருகன் மகன் காளிதாஸ்(19). நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு மங்கலம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலை நூக்காம்பாடி அருகே உள்ள செம்மண்குட்டை கிராமம் அருகே வந்தபோது மொபட்டும், பைக்கும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரமேஷ், முருகன், தர்மராஜ் ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தம்பதி பலி: திருப்பூர் அடுத்துள்ள கணியாம்பூண்டி சுரபி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (42). பேன்சி கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி புஷ்பா (38). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். நேற்று முன்தினம் வினோத்குமாரும் புஷ்பாவும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மங்களத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர். வஞ்சிபாளையம் மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரியும், வினோத்குமார் ஓட்டிச் சென்ற மொபட்டும் மோதின. இதில், கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் மஞ்சுநாதன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
The post மொபட்-பைக் மோதல்; 3 பேர் பரிதாப பலி: பைக்-லாரி மோதி தம்பதி சாவு appeared first on Dinakaran.