பிரதமர் மோடி அக்.2ம் தேதி தமிழகம் வருகை; பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார்: அதிகாரிகள் இன்று ஆய்வு

மதுரை: பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை, அக்.2ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – ராமேஸ்வரத்தை இணைக்கும் விதமாக, 1914ல் ரயில்வே பாலம் கட்டப்பட்டது. மொத்தம் 2.05 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்ட இப்பாலம், 110 ஆண்டுகளை கடந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பால் பலத்த சேதமடைந்து வந்தது. இதையடுத்து, பழைய பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்ட 2018ல் ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. இதற்காக, ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 2019, மார்ச் 1ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2021 செப்டம்பருக்குள் பாலப்பணிகள் முடியும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடற்பகுதியில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், கொரோனா தொற்றாலும் பாலம் கட்டும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால், பாலம் கட்டுமான திட்ட செலவு ரூ.535 கோடியாக அதிகரித்தது. தொடர்ந்து, ரயில்வே நிர்வாகத்தின் பொறியியல் பிரிவான, ரயில் விகாஸ் நிறுவனம் வாயிலாக பணிகள் நடந்து வந்தன.

புதிய பால கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கி நடந்து வந்த நிலையில், பழைய பாலத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அங்கு, கடந்தாண்டு டிசம்பர் முதல் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது, 101 தூண்களுடன், 333 கான்கிரீட் அடித்தளங்கள் அமைக்கப்பட்டு, 2,078 மீ நீளத்திற்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம், பழைய பாலத்தை விட ஒன்றரை மீட்டர் உயரம் கொண்டது. பாலத்தின் மையத்தில் 27 மீட்டர் உயரத்திற்கு ஹைட்ராலிக் லிப்ட்கள் மூலம் இயங்கும், இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்கு பாலத்திற்கான ஆபரேட்டர் மற்றும் டிரான்ஸ்பார்மர் அறைகள், மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைக்க, இரண்டு மாடி கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. இதை, பிரதமர் மோடி வரும், அக்.2ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இன்று காலை 11.30 மணியளவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் வஸ்தவா தலைமையிலான அதிகாரிகள், பாம்பன் பாலத்தை ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும், வளர்ச்சி பணிகளையும் மதியம் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி அக்.2ம் தேதி தமிழகம் வருகை; பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார்: அதிகாரிகள் இன்று ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: