மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் தமிழக மக்களின் கொந்தளிப்புக்கு ஒன்றிய அரசு ஆளாக நேரிடும்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மொத்த நிதியில் 80 சதவிகித நிதி மராட்டியம், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு அப்பட்டமான பாரபட்சத்தை கடைப்பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2022-23, 2023-24 நிதியாண்டில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. பெரும்பாலான நிதிச்சுமையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டியிருப்பது வேதனைக்குரியது. நிதிநிலை அறிக்கையில் இந்தியா முழுமைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.21,247 கோடியே 94 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படாதது கண்டனத்திற்குரியது.

ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிதி ஒதுக்கவில்லை என்றாலும் மாநில அரசு மெட்ரோ ரயில் திட்டங்களை பல வழித்தடங்களில் செயல்படுத்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை வரவேற்கிறேன். தமிழக மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதங்களுக்கு ஒன்றிய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இத்தகைய பாரபட்ச போக்கை ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து பின்பற்றுமேயானால் தமிழக மக்களின் கடும் கொந்தளிப்புக்கும், எதிர்ப்புக்கும் ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்.

The post மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் தமிழக மக்களின் கொந்தளிப்புக்கு ஒன்றிய அரசு ஆளாக நேரிடும்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: