மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

சென்னை: மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 28ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூரில் இயங்கி வரும் பரம்பொருள் பவுன்டேசனை சேர்ந்த சொற்பொழியாளர் மகாவிஷ்ணு கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது, ‘மாற்றுத்திறனாளிகள் கண் இல்லாமல், கால் இல்லாமல் இறைவன் படைக்கிறார்.

அவ்வாறு பிறப்பதற்கு காரணம், அவர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியம் தான் காரணம் என்று மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தி அறிவியலுக்கு மாறாக உரையாற்றினார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து ெகாண்ட பார்வையற்ற ஆசிரியர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கல்வியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே சைதாப்பேட்டை ஜீயர் சந்து பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான விஜயராஜ்(53) என்பவர் கடந்த 6ம் ேததி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சொற்பொழிவாளரான மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரின் படி சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சேட்டு விசாரணை நடத்தினார். அதில், சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவின் படி 192, 196(1)(ஏ), 352, 353(2), 92(ஏ) ஆகீய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கனவில் சித்தர்கள் கூறியதை தான் நான் பேசினேன் என்று கூறினார். அதைதொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது தொடர் புகார்கள் வந்ததாலும், இது போல் பல சர்ச்சை வீடியோக்களை தனது யூடியூபில் பதிவு செய்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் மகாவிஷ்ணுவை 5 நாள் காவலில் விசாரணை நடத்த கடந்த திங்கள் கிழமை சைதாப்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் போலீசார் தாக்கல் செய்த மனு மீது விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனால் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதனை தொடர்ந்து மகாவிஷ்ணுவை, 3 நாள் காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மகாவிஷ்ணுவை 7 நாள் விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை அனுமதி கோரியிருந்த நிலையில் 3 நாள் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

The post மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: