ஆசிரியர் போராட்டத்தால் பாதிப்பு இல்லை: தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல்

சென்னை: தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் போராட்டத்தால் நேற்றைய தினம் 37,479 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றாலும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு கற்றல்கற்பித்தல் பணிகள் தொடர்ந்து நடந்தன என தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (டிட்டோஜாக்) தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்பு போராட்டத்தையும் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, போராட்டத்தில் 72 சதவீத ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றதாகவும், சில பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாததால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததாகவும், இதனால் கற்றல்கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் 70 சதவீதத்துக்கு மேல் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதாக கூறப்பட்ட நிலையில், இதுதொடர்பாக தொடக்கக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘1 லட்சத்து 22 ஆயிரத்து 343 ஆசிரியர்களில், 37 ஆயிரத்து 479 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இருப்பினும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், கற்றல்கற்பித்தல் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என கூறிய பின்னரும் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினால் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.

 

The post ஆசிரியர் போராட்டத்தால் பாதிப்பு இல்லை: தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: