பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், வெவ்வேறு கட்டமாக விசர்ஜன ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆழியார் ஆற்றில் கரைக்கப்பட்டது. இன்றுடன் விசர்ஜன ஊர்வலம் நிறைவடைவதாக போலீசார் தெரிவித்தனர்.பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட நகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த சிலைகளை ஆற்றில் கரைக்கும் விசர்ஜன ஊர்வலம் ஒவ்வொரு நாளாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று, ஆனைமலை பகுதியில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் என பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. ஆனைமலை மற்றும் ஆழியார், கோட்டூர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும், ஆனைமலையில் விசர்ஜன ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கப்பட்டது. விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று (10ம் தேதி) பொள்ளாச்சி நகரில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. பல்லடம் ரோடு ராஜேஸ்வரி மண்டபம் அருகிருந்து துவங்கும் விசர்ஜன ஊர்வலம், தேர்நிலை, பஸ்நிலைய பகுதி, ஜமீன் ஊத்துக்குளி, மீன்கரை ரோடு வழியாக அம்பராம்பாளையம் சென்றடைகிறது. நகரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் இன்று மாலையுடன் நிறைவடைவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆழியார் ஆற்றில் கரைப்பு appeared first on Dinakaran.