சிலிர்க்க வைக்கும் சிவகாமி தேவியின் மகிமைகள்

சிதம்பரம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நடராஜப் பெருமான்தான். ஆனால் அந்த நடராஜப் பெருமானுக்கு இணையாக மகிமைகள் பல உடையவள், அவரது மனை மங்கலமாகிய சிவகாமிதேவி. அவளது மகிமைகளில் சிலவற்றை காண்போம் வாருங்கள்.மந்திர சாஸ்திரங்கள் போற்றும் சக்தி பீடம்அம்பிகைக்கு பூமியில் கூறப்பட்டிருக்கும் முக்கியமான சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று என்பது ஸ்ரீவித்யா உபாசனையை பற்றி விளக்கும் கிரந்தங்களின் முடிவான முடிவு. அது மட்டுமில்லாமல், தஹர வித்யாகாண்டம் என்ற தந்திர நூலும், சிதம்பர கல்பம் போன்ற மந்திர நூல்களும் விளக்கிக் கூறும், சக்ரத்தின் மத்தியில் இருக்கும் அம்பிகையின் மந்திர ரூபத்தை போலவே, இங்கு தேவியின் திருமேனி அமைந்திருக்கிறது.

சித்தர்கள் போற்றும் சிவகாமி

பதஞ்சலி முனிவர், சிவகாமியின் அருளாலே ஞானம் பெற்று சமஸ்கிருத இலக்கண நூலான வியாகரண மகாபாஷ்யம் முதலிய பல நூல்களை எழுதினார். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான நந்திதேவரும், திருமூலரும், இந்த தேவியை நன்றாக பூஜித்து பல சித்திகளை அடைந்தார்கள். மேலும் சிதம்பரம் சிவகாமி அம்மையை உபாசிக்கும் முறையை, தங்கள் நூல்களில்கூறி இருக்கிறார்கள். அதிலும் திருமூலரின் திருமந்திரம் இந்த அம்பிகையை பற்றி வெகு அழகாக எடுத்துரைக்கிறது என்பது ஆன்றோர்கள் வாக்கு. ஹயக்ரீவர், அகத்தியர், அகத்தியர் மனைவியான லோபாமுத்திரை, தூர்வாச முனிவர், பரசுராமர் போன்ற பல முனிவர்கள் இந்த அம்பிகையை பூஜித்து பயனடைந்ததாக தல வரலாறு சொல்கிறது.

சங்கரருக்கு அருளிய சிவகாமி

கேன உபநிஷத்திற்கு, சங்கரர் உரை எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, ‘‘பஹு ஷோபமாநானம் உமாம் ஹைமவதீம் தாம் ஹோவாச’’ என்ற உபநிஷத்தின் வரிக்கு என்ன உரை எழுதுவது என்று விளங்காமல் தவித்தார். அப்போது சங்கரருக்கு காட்சி தந்த சிவகாமி, ‘‘நானே அந்த வரிக்கான பொருள்! பஹு ஷோபமாநானம் என்னும் படி அதீத அழகை உடையவளும், ஹைமவதி அதாவது பர்வத ராஜனுக்கு மகளாக பிறந்தவளும், உமையுமாகிய நானே. நானே அந்த வரிக்கு பொருள்’’ என்று அமுதமாக மொழிந்தாள். அம்பிகையின் திருவாக்கால் ஞானம் பெற்ற ஆதிசங்கரர் அற்புதமாக உபநிஷதத்துக்கு உரை எழுதி முடித்தார்.

காஞ்சி காமாட்சி கோயிலுக்கு நிகரான சந்நதி. சிவகாமி சந்நதியை உற்று நோக்கினால் அதை தனி கோயிலாகவே கருதலாம் என்னும் படி இருக்கும். சிவகாமி அம்பிகை சந்நதியின் விமானத்தில் மூன்று தூண்கள் இருக்கிறது. அதே போல, அம்பிகையின் சந்நதிக்கு, சமீபத்தில் வேறு சிவாலயங்கள் எதுவும் இல்லை. மேலும், தெற்கு நோக்கிய நடராஜப் பெருமான் சந்நதிக்கு, வடபுறம்
சிவகாமி அம்மையின் சந்நதி அமைந்திருக்கிறது.

ஆனால், உற்று நோக்கினால் நடராஜப் பெருமான் சந்நதிக்கு வலப்புறம் இருப்பது போல தேவியின் திருக்கோயில் இருக்கும்.மேலே சொன்ன அம்சங்கள் அனைத்தும் நிரம்பியதால், திரி புராண்டம் என்ற ஆகம நூலின் படி, தேவியின் இந்தக் சந்நதி தனி ஆலயமாகவே கருதப்படுகிறது. இதைப் போன்ற ஒரு அமைப்பு காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிலும், இங்கு மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பிகையே விரும்பி வசிக்கும் இடம்

தேவி பாகவதம் என்ற புராணத்தில், தேவி கீதை என்ற ஒரு பகுதி உண்டு. இதில், தான் விரும்பி வசிக்கும் இடங்களை அம்பிகையே அழகாக சொல்கிறாள். ‘‘மீனாக்ஷ்யா பிரதமம் ஸ்தானம், யஸ்ச்ச புரோக்தம் சிதம்பரே’’ என்பது அம்பிகையின் வாக்கு.‘‘நான் விரும்பி வசிக்கும் இடம் மதுரை (மீனாட்சி அம்மன் கோயில்) ஆனால், அதைவிட நான் மிகமிக சந்தோஷத்தோடு இருப்பது சிதம்பரத்தில்’’ என்று அம்பிகையே, தேவி பாகவதம் என்ற புராணத்தில் சொல்கிறாள்.

லலிதா சஹஸ்ர நாமம் போற்றும் திருத்தலம்

லலிதா ஸஹஸ்ர நாமத்தில், வரும் ‘‘நந்தி வித்யா’’ என்ற நாமமும், ‘‘நடேஷ்வரி’’ என்ற நாமும் சிவகாமி அம்மையை பற்றியதே என்று சஹஸ்ர நாமத்திற்கு உரை எழுதிய பாஸ்கர ராயர் என்ற மகான் சொல்கிறார். அம்பிகையை உபாசிக்கும் முறையான ஸ்ரீவித்யா வழிபாட்டில் சித்தி அடைந்த பெரும் மகானான பட்ட நாராயணரும் இதே கருத்தையே தெரிவிக்கிறார்.உமாபதி சிவாச்சாரியாருக்கு தேவி அருளிய விதம்

சமய சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் என்ற பெரும் மகான், ‘‘மந்திர மூர்த்தி தீட்சிதர்’’ என்ற பெரும் ஞானியிடம் அம்பிகையை வழிபடும் முறையை உபதேசமாக பெற்றார். பிறகு, சிவகாமி அம்பிகை சந்நதி கோஷ்டத்தில், முறையாக ஸ்ரீசக்ரம் எழுதி, அம்பிகையின் மூல மந்திரத்தை ஜெபித்து, மந்திர சித்தி அடைந்து, பல விதமான ஞானமும் சித்தியும் பெற்றார். இன்றும் அந்த மகான் எழுதிய சக்ரம் கோயிலில் இருக்கிறது. இது அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

தேவியின் நாமமே பெரும் மந்திரம்

ஒருமுறை நடராஜப் பெருமானுக்கு கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஊர் மக்கள் அனைவரும், உமாபதி சிவாச்சாரியார் என்ற மகானை மிகவும் கொண்டாடினார்கள். இது அவ்வூரில் வசித்து வந்த மாந்த்ரீகனுக்கு பெரும் பொறாமையை ஏற்படுத்தியது. எப்படியாவது உமாபதி சிவாச்சாரியாரை வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டான். காரப் பெருமாள் சாஸ்தா கோயிலுக்கு பின்னே இருக்கும் குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு, ஸ்தம்பன மந்திரத்தை ஜெபித்து வந்தான். இதனால், கும்பாபிஷேக யாகசாலையில் உள்ள பிரதான கலசம் இம்மி அளவுகூட நகராமல் அப்படியே இருந்தது. தீட்சிதர்கள் பலவாறு முயன்றுகூட அந்த கலசத்தை அசைக்கவோ தூக்கவோ முடியவில்லை.

குறித்த நேரத்திற்குள் கலச நீரை கும்பத்தின் மேல் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் தீட்சிதர்கள் தவித்தார்கள். அனைவரும் உமாபதி சிவாச்சாரியார் காலில் விழுந்து அவரை தஞ்சம் புகுந்தார்கள். அவர் சிவகாமி அம்மையை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார். அவரது ஞானக் கண்களுக்கு மந்திரவாதி செய்யும் துர் மந்திர பிரயோகம்தான் இதற்கு காரணம் என்று தெரிந்தது. உடனேயே கை நிறைய திருநீற்றை எடுத்தார், ‘‘அம்மா சிவகாமி’’ என்று சொன்ன படியே யாகசாலையில் இருந்த பிரதான கலசத்தின் மீது தெளித்தார். அந்த கலசம் அடுத்த நொடி தானாக வந்து சிவாச்சாரியார் கையில் அமர்ந்து கொண்டது.

அப்போதும்கூட விடாமல் அந்த மந்திரவாதி, துர் மந்திரங்களை ஜெபித்து கொண்டே இருந்தான். ஆகவே, கும்பாபிஷேகம் முடியும் வரை காத்திருந்த சிவாச்சாரியார், அதற்கு பின் மீண்டும் சிவகாமி என்ற அம்பிகையின் பெயரை ஜெபித்து கொண்டே ஒரு இளநீரை வெட்டினார். அந்த துர்மந்திரவாதியின் மந்திர சக்தி அனைத்தும் இல்லாமல் போனது.

இப்படி பெரும் துர் மந்திரங்களாலும் அபிசார பிரயோகத்தாலும் வரும் தீங்குகளை சிவகாமி அம்பிகையின் பெயரை சொல்வதன் மூலமே வென்றுவிடலாம் என்று உலகிற்கு உமாபதி சிவாச்சாரியார் காட்டித் தந்தார்.இப்படி சிதம்பரம் சிவகாமி அம்பிகையின் மகிமையை சொல்லிக் கொண்டே போகலாம். பல பெருமைகள் நிறைந்த அந்த சிவகாமி அம்பிகையின் திருவடியை நாமும் சரணடைந்து வாழ்வில் எல்லா விதமான நன்மைகளும் பெறுவோம்.

ஜி.மகேஷ்

The post சிலிர்க்க வைக்கும் சிவகாமி தேவியின் மகிமைகள் appeared first on Dinakaran.

Related Stories: