யுஎஸ் ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன்: வெற்றியை அத்தைக்கு அர்ப்பணிப்பதாக உருக்கம்

நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ்தொடர் நியூயார்க்கில் நடந்து வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டி நேற்றிரவு நடந்தது. நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் 23 வயதான ஜானிக் சின்னர், 12ம் நிலை வீரரான அமெரிக்காவின் 26 வயது டெய்லர் ஃபிரிட்ஸ் பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டையும் 6-4 என எளிதாக அவர் தன்வசப்படுத்தினார். தொடர்ந்து 3வது செட்டில் டெய்லர் பிரிட்ஸ் கடும் சவால் அளித்த போதிலும் ஜின்னர் 7-5 என கைப்பற்றினார். முடிவில் 6-3,6-3,7-5 என்ற நேர் செட்டில் ஜானிக் சின்னர் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். பட்டம் வென்ற ஜானிக் சின்னருக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.30.23 கோடி பரிசு வழங்கப்பட்டது 2வது இடம் பிடித்த டெய்லர் பிரிட்சுக்கு ரூ.15.11 கோடி பரிசு கிடைத்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி தப்பித்த ஜானிக் சின்னர், யுஎஸ் சாம்பியன் பட்டம் வென்ற பின் கூறியதாவது:, எனது டென்னிஸ் வாழ்க்கையில் கடந்த சில மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் எனக்கு ஆதரவாக குழுவினர் குடும்பத்தினர் இருந்தனர். நான் டென்னிசை விரும்புகிறேன். ஆனால் டென்னிஸ் களத்திற்கு வெளியேயும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. இந்தகோப்பையை எனது அத்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஏனெனில் அவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவர் எனது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக இருந்தார். இப்போதும் இருக்கிறார். இந்த வெற்றியை அவருடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

நம்பர் 1 இடத்தை பிடிப்பதே இலக்கு
மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பெலாரசின் அரினா சபலென்கா தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார். போலந்தின் இகா ஸ்வியாடெக் முதல் இடத்தில் இருக்கிறார். நேற்று சாம்பியன் கோப்பையுடன் போட்டோ ஷுட்டில் பங்கேற்ற சபலென்கா கூறுகையில், நிச்சயமாக எனக்கு ஒரு குறிக்கோள் உள்ளது. மீண்டும் உலகின் நம்பர் 1 இடத்தை பிடிக்கவேண்டும்.. ஆனால் அந்த இலக்கைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. இப்போது எனக்கு நிச்சயமாக சில நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதனால் இந்த வெற்றியை அனுபவிக்க முடியும், இந்த ஆண்டின் கடைசி சீசன் முடியும் வரை இந்த புத்துணர்ச்சியை நான் வைத்திருப்பேன், என்றார்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன்: வெற்றியை அத்தைக்கு அர்ப்பணிப்பதாக உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: