யுஎஸ் ஓபன் டென்னிஸ்: பைனலில் சின்னர் – பிரிட்ஸ்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் 1 வீரர் யானிக் சின்னர் – டெய்லர் பிரிட்ஸ் மோதுகின்றனர். அரையிறுதியில் பிரிட்டனின் ஜாக் டிரேப்பர் (22 வயது, 25வது ரேங்க்) உடன் மோதிய இத்தாலி நட்சத்திரம் சின்னர் (23 வயது, 1வது ரேங்க்) 7-5, 7-6 (7-3), 6-2 என நேர் செட்களில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 3 மணி, 3 நிமிடங்களுக்கு நீடித்தது. மற்றொரு அரையிறுதியில் அமெரிக்க வீரர்கள் டெய்லர் பிரிட்ஸ் (26 வயது, 12வது ரேங்க்) – பிரான்சிஸ் டியபோ (26 வயது, 20வது ரேங்க்) மோதினர். 5 செட் வரை நீண்ட விறுவிறுப்பான இப்போட்டியில் பிரிட்ஸ் 4-6, 7-5, 4-6, 6-4, 6-1 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். மாரத்தான் போராட்டமாக அமைந்த இப்போட்டி 3 மணி, 18 நிமிடத்துக்கு நடந்தது.

இந்த வெற்றியின் மூலம் சின்னரைப் போலவே பிரிட்சும் முதல் முறையாக யுஎஸ் ஓபன் பைனலுக்கு முன்னேறியுள்ளார். சின்னருக்கு இது 2வது கிராண்ட் ஸ்லாம் பைனலாகும். ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸி. ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டமும் வென்றார். எனவே, இன்று நடைபெறும் பைனலில் வெற்றியை தொடர சின்னர் வேகம் காட்டுவார். அதற்கு பிரிட்ஸ் சரியான பதிலடி கொடுத்தால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இருவரும் 2 முறை மோதியுள்ளதில் 1-1 என சமநிலை வகிக்கின்றனர். கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இன்று முதல் முறையாக மோதுகின்றனர்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்: பைனலில் சின்னர் – பிரிட்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: