விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே, பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பகவிநாயகர் கோயில் சதுர்த்தி பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை சந்தனக்கபாப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நடந்த ஆவணி தேரோட்டம் நடைபெற்றது. இதில், சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர். விழாவின் 10ம் நாளான இன்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் தங்கக்கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பின்னர் விநாயகப்பெருமான் தங்கமூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் கோயில் குளம் முன்பு எழுந்தருளினர். பின்னர் குளத்தின் படிக்கட்டில் அங்குசதேவருக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, தீபாதனை நடந்தது. பின்னர் சிவாச்சாரியர், அங்குசத்தேவருடன் குளத்தில் 3 முறை மூழ்கி எழ, விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் வீதி உலா நடந்தது. மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது.

The post விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: