அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு: தவறு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்

சென்னை: தவறு யார் செய்தாலும் சரி, அவர்கள் நம்முடைய சமுதாயத்தில் இருந்து மட்டுமல்ல, பள்ளி கல்வித்துறையில் இருந்தும் தப்பிக்க முடியாது. தவறு செய்தவர்களுக்கான தண்டனை கண்டிப்பாக உண்டு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நேற்று நடந்த ‘கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப் பெரிய ஆயுதம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். மூடநம்பிக்கை பேச்சாளார் விஷ்ணுவை எதிர்த்து உரத்த குரல் எழுப்பிய தமிழாசிரியர் சங்கரை இந்த விழா மேடையில் அமைச்சர் கவுரவித்தார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: விற்பனைப் பொருளாக சமுதாயம் நல்லதையும் வைத்திருக்கும், கெட்டதையும் வைத்திருக்கும். நாம் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் நம்முடைய அறிவு அடங்கி இருக்கிறது. பகுத்தறிவாக நாம் உணர வேண்டிய இடம் பள்ளிக்கூடங்கள்தான். இங்கு ஒருவரை நாங்கள் உட்கார வைத்திருக்கிறோம். அவர் ஒரு தமிழாசிரியர். அவர் தன்னுடைய இரு கண்களையும் பறிகொடுத்தவராக இங்கே அமர்ந்திருக்கிறார். ஆனால் அவருக்கு கண்ணாக இருப்பது எது என்றால், அவர் படித்த கல்விதான். அதனால்தான் அவர் மேலே அமர்ந்திருக்கிறார். மேலே அமர்ந்திருப்பது மட்டுமல்ல, யாராவது பிற்போக்கு சிந்தனையான கருத்துக்களைச் சொன்னால், “ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்… எவ்வாறு அது சாத்தியப்படும்… நீங்கள் சொல்வது தவறு” என்று எழுந்து நின்று சொல்லும் ஒரு ஆசிரியராக நமக்கு கிடைத்திருக்கும் ஆசிரியர் சங்கர்.

இன்றைக்கு இதுபோன்ற பிற்போக்கு சிந்தனைவாதிகளிடமிருந்தும் தமிழ்தான் நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அனைவரும் சமம், இதில் ஏற்றத்தாழ்வு எது? படித்தால் அனைவருமே சமம்தான். நிர்வாக ரீதியாக நாம் எப்படி அனுமதி பெற வேண்டும், யார் யாரை அழைக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச புரிதல் நம்முடைய ஆசிரிய பெருமக்களாகிய உங்களிடம் இருக்க வேண்டும். தவறு யார் செய்தாலும் சரி, அவர்கள் நம்முடைய சமுதாயத்தில் இருந்து மட்டுமல்ல, பள்ளி கல்வித்துறையில் இருந்தும் தப்பிக்க முடியாது. தவறு செய்தவர்களுக்கான தண்டனை கண்டிப்பாக உண்டு. அது எப்படிப்பட்ட தண்டனையாக இருக்கும் என்பதை பள்ளி நிர்வாகத்தின் மூலமாக கண்டிப்பாக அதை உறுதி செய்ய வேண்டியது ஒரு துறையின் அமைச்சராக என்னுடைய கடமை, என்னுடைய பொறுப்பாக அதை நான் பார்க்கிறேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

The post அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு: தவறு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம் appeared first on Dinakaran.

Related Stories: