நில ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்ததாக புகார்: இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான 4 இடங்களில் சிபிஐ சோதனை: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை


சென்னை: சோழிங்கநல்லூரியில் நில ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபுவுக்கு சொந்தமான 4 இடங்களில் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் ேநற்று சோதனை நடத்தினர். நீலாங்கரையை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு சோழிங்கநல்லூரில் பல கோடி மதிப்புள்ள 18.25 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை கோபாலகிருஷ்ணன் என்பவர் ஆக்கிரமிப்பு ெசய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நிலத்தின் உரிமையாளரான கார்த்திக், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த ஆனந்த்பாபு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நிலத்தின் உரிமையாளரான கார்த்திக், சென்னை உயர்நீதிமன்றத்தில், நிலத்தை ஆக்கிரமிப்பு ெசய்தவர்கள் மற்றும் ஆதரவாக இருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ நிலம் மோசடி தொடர்பாக கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீலாங்கரையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆனந்த்பாபு தொடர்பான இடங்களான அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் உள்ள வீடு, பெசன்ட் நகர், சாஸ்த்திரி நகர், சோழிங்கநல்லூரில் உள்ள உறவினர்கள் வீடு என 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஆனந்த் பாபு நீலாங்கரையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காலத்தில் அவர் பயன்படுத்திய வங்கி கணக்கு விவரங்கள், சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் சிபிஐ சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

The post நில ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்ததாக புகார்: இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான 4 இடங்களில் சிபிஐ சோதனை: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: