நாகப்பட்டினம் அவுரித்திடலில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம், செப்.5: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நாகப்பட்டினம் அவுரித்திடலில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தொடங்கி வைத்தார்.அரசு அலுவலக கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தனியார் கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைத்து மழை நீரை சேகரிக்க வேண்டும். வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை முழுமையாக சேகரித்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும், நீர் ஆதாரத்தை பெருக்கிடவும், குடிநீர் தரத்தை மேம்படுத்தவும் வேண்டும். அந்த வகையில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி அவுரித்திடலில் தொடங்கி பொது அலுவலக சாலை வழியாக நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலக வளாகத்தை சென்றடைந்தது. மழைநீர் சேகரிப்பின் அவசியம், மழை நீர் சேகரிப்பு பற்றியும் பொதுமக்களிடம் நேரடியாக சென்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த
குறும்படங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதிநவீன மின்னணு காணொளி வாகனம் மூலம் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த வாகனம் மூலம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று வடகிழக்கு பருவமழை, கோடை காலங்களில் பெய்யும் மழைநீரை சேகரிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள், கூரையின் மேல் விழும் மழைநீரை சேகரித்தல், திறந்தவெளி கிணறு மூலம் மழை நீரை சேகரித்தல், குழாய் கிணறு மூலம் மழைநீரை சேகரித்தல் குறித்து குறும்படங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மழை நீரை நேரடியாகவோ அல்லது நிலத்தடியிலோ செலுத்தி எப்படி சேமிப்பது என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
ஆர்டிஓ அரங்கநாதன், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் லீனாசைமன், நாகப்பட்டினம் தாசில்தார் ராஜா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர்கள் விநாயகம், ஜெயக்குமார், உதவி நிர்வாகப் பொறியாளர்கள் ஆன்டனிஸ்டீபன், ஜெயபால், பிரபாகரன், உதவி பொறியாளர்கள் தியாகராஜன், ரஞ்சித், ராஜசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post நாகப்பட்டினம் அவுரித்திடலில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: