சிக்கன் கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபரை அள்ளிய போலீஸ் நண்பர்கள் 2 பேருக்கு வலை நாங்க இந்த ஏரியா ‘ரவுடி டா’

பள்ளிகொண்டா, செப்.5: பள்ளிகொண்டா அருகே சிக்கன் கடையில் புகுந்த 3 வாலிபர்கள் சிக்கன் சாப்பிட்டு விட்டு பணம் தராமல், மாத மாதம் ₹5000 மாமூல் தர வேண்டும் எனவும், நாங்க இந்த ஏரியா ரவுடி என கூறி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய அவரது நண்பர்கள் 2 பேரை தேடி வருகின்றனர். ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவர் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஹரிஷ், பரத் ஆகிய 2 பேரும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் வழக்கம்போல் மாலை சிக்கன் கடையில் மோகன் மற்றும் ஊழியர்கள் பரபரப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ் (எ) நிதிஷ்குமார்(23), மணிமாறன், மதிமாறன் ஆகிய 3 பேரும் சிக்கன் கடையில் குடிபோதையில் நுழைந்துள்ளனர். தொடர்ந்து அனைவரும் சிக்கன் 65 ஆர்டர் செய்து ₹500 வரை சாப்பிட்டுள்ளனர். அதுபோக அரை கிலோ சிக்கனை பார்சல் கட்டி கொண்டு பணம் தராமல் எழுந்து சென்றதை பார்த்த ஊழியர் பரத் சாப்பிட்ட சிக்கனுக்கு பணம் தருமாறு கூறியுள்ளார்.

அதற்கு நிதிஷ், மணிமாறன், மதிமாறன் ஆகிய 3 பேரும் ஹரிஷை தகாத வார்த்தையால் பேசி அடிக்க முயன்றுள்ளனர். அதனை தடுக்க வந்த உரிமையாளர் மோகன் மற்றொரு ஊழியர் பரத் ஆகியோரிடம் நிதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் நாங்கள் யார் தெரியுமா எங்கள் பேக் ரவுண்ட் தெரியுமா? பள்ளிகொண்டா பகுதிக்கே நாங்கள் ரவுடி டா என கூறி எங்களிடமே பணம் கேட்குறீயா என மிரட்டல் தோனியில் பேசியுள்ளனர். மேலும், இங்கு கடை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் மாதந்தோறும் எங்களுக்கு ₹5000 ரவுடி மாமூல் தர வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சிக்கன் போட கடாயில் வைத்திருந்த சூடான எண்ணெய்யை தூக்கி ஊற்றி கடையை களேபரமாக்கி கல்லா பெட்டியில் இருந்த ₹1000 எடுத்து கொண்டு, மீண்டும் நாளைக்கு வருவோம் மீதி பணத்தை எடுத்து வை என கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அதனையடுத்து, கடை ஊழியர் ஹரீஷ் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் நிதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post சிக்கன் கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபரை அள்ளிய போலீஸ் நண்பர்கள் 2 பேருக்கு வலை நாங்க இந்த ஏரியா ‘ரவுடி டா’ appeared first on Dinakaran.

Related Stories: