புதுடெல்லி: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பேசினார்கள். பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினோஷ் போகத் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக சக வீரர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற பின்னர் உடல் எடை கூடியதால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த இருவரும் நேற்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்கள். அரியானாவில் அக்டோபர் 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இருவரும் அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடக்கூடும் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன. அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 66 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வரை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
The post அரியானாவில் காங். சார்பில் போட்டி? மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ராகுலுடன் சந்திப்பு appeared first on Dinakaran.