விவசாய மின்இணைப்பை வீட்டுக்கு பயன்படுத்தினால் அபராதம் மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரம்

வேலூர், செப்.4: விவசாய மின்இணைப்புகளில் வீட்டு உபயோகத்துக்கு மின்சாரம் பயன்படுத்தும் பயனாளர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் விவசாய பயன்பாட்டுக்கு இலவச மின்இணைப்புகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 26 லட்சம் பேர் விவசாயத்துக்கான இலவச மின்இணைப்பை பெற்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 7 ஆயிரம் பேர் இந்த இணைப்பை பெற்றுள்ளனர். இதற்காக ஆண்டுக்கு அரசு ₹5.80 கோடியை வேளாண்துறை மூலம் மின்வாரியத்துக்கு மானியமாக வழங்குகிறது. விவசாய மின்இணைப்பில் 16 மணி நேரமும் அவர்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2021ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் வரை 1336 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மின்இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் விவசாய இலவச மின்இணைப்பு வழங்குவதற்கு முன்னதாக விவசாய மின்இணைப்பு மூலம் வீட்டு உபயோகத்துக்கு மின்சாரம் பயன்படுத்துபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேலூர் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அவ்வபோது கிடைக்கும் தகவலின் அடிப்படையில் விவசாய மின்இணைப்பில் இருந்து வீட்டு உபயோகத்துக்கு மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு அபராதம் விதிப்பதுடன், வீட்டுக்கு செல்லும் மின்இணைப்பை துண்டிப்பதுடன், வீடுகளுக்கு தனியான மின்இணைப்பை வழங்கும் வகையில் அவர்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பத்தை கேட்டு பெற்றுக் கொள்கிறோம். அதோடு அடுத்தடுத்து இதே தவறை செய்யும்பட்சத்தில் அபராதத்தொகை பல மடங்கு அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறோம். இதனால் விவசாயிகளும் அபராதத்தொகையை கட்டியவுடன் மின்வாரியத்தின் அறிவுறுத்தலை ஏற்றுக் கொள்கின்றனர்’ என்றனர்.

The post விவசாய மின்இணைப்பை வீட்டுக்கு பயன்படுத்தினால் அபராதம் மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: